உலகம்

இனி பணநோட்டில் பிரிட்டிஷ் மன்னர்களின் புகைப்படத்துக்கு இடமில்லை.. அதிரடி முடிவெடுத்த ஆஸ்திரேலியா அரசு !

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். உலகிலேயே நீண்ட ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்ற நிலையில் அவரின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இவரின் மறைவுக்கு பின்னர் இவரின் மகன் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். சூரியன் மறையாத தேசமாக இருந்த பிரிட்டன் இரண்டு உலக போரின் காரணமாக அதன் காலணிகளை இழந்து பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆனால், இப்போதும் கனடா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா உள்ளிட்ட 15 நாடுகள், பிரிட்டரின் அரசர், அரசியை தங்களது நாட்டின் தலைவராகக்கொண்டு செயல்பட்டுவருகின்றன.

கடந்த ஆண்டு கரீபியன் கடல் பகுதியையொட்டி அமைந்திருக்கும் பார்படோஸ் நாடு தங்கள் நாட்டின் தலைவர் பதவியிலிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு, புதிய குடியரசு நாடாக தன்னை அறிவித்தது.அதைத் தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கரீபியன் நாடுகளான பெர்முடா, ஆண்டிகுவா போன்ற நாடுகள் பிரிட்டன் மன்னரின் அதிகாரத்தை தொடரலாமா அல்லது குடியரசாக மாறலாமா என வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தன.

ஆனால், ஆஸ்திரேலியா,கனடா,நியூஸிலாந்து போன்ற நாடுகள் புதிய மன்னர் சார்லசை தங்கள் மன்னராக ஏற்பதாக அறிவித்தது. இந்த நிலையில், பிரிட்டிஷ் மன்னர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கப்படுவதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதிய 5 டாலர் நோட்டில், பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் புகைப்படத்துக்கு மாற்றாக, உள்நாட்டு வடிவமைப்பு இடம்பெறும் என கூறியுள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலிய நாணயங்களில், தொடர்ந்து மன்னரின் படம் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தற்போது சுதந்திய நாடாக இருந்தாலும் அதன் அரசியல் தலைவராக பிரிட்டனின் அரசர்,அரசியே நீடிக்கின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவின் கொடியிலும் பிரிட்டன் முடியாட்சியை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: அதானிக்கு வழங்கிய கடன் எவ்வளவு? இழப்பு என்ன? -விளக்கமளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!