உலகம்

பாகிஸ்தான் : வெள்ள பாதிப்பு நிவாரணப்பொருள் உணவு தாமதம்.. 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு !

பாகிஸ்தானில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரலாறு காணாத வெள்ளத்தால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பேரழிவு வெள்ளத்தில் சிக்கி சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கிருக்கும் சிந்த் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் அவர்கள் வேறு பகுதியில் உள்ள தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு தங்கியிருந்த 6 வயது ரசியா என்ற சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் தந்தை கதறி அழுது பேட்டியளித்துள்ளார். அதில், "நாங்கள் எங்கள் பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து தற்போது வேறு பகுதிக்கு வந்துள்ளோம். இங்குள்ள அதிகாரிகள் எங்களுக்கு உணவோ கூடாரமோ வழங்கவில்லை. மாறாக எங்களது விவரங்களை கேட்பதிலேயே குறியாக இருந்தனர்.

எங்கள் அனைவரின் குடும்பமும் தற்போது பசியில் வாடுகிறோம். குழந்தைகள் பசியாலும் நோயாலும் அவதி படுகின்றனர். அதிகாரிகள் சரியான நேரத்திற்க்கு உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை வழங்கியிருந்தால் தற்போது எனது மகள் உயிரோடு இருந்திருப்பார்" என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.

Also Read: மதுரை:வீட்டிலிருந்த 60 பவுன் நகைகளை திருடி INSTA ஆண் நண்பருக்கு கொடுத்த 16வயது சிறுமி.. சிக்கியது எப்படி?