உலகம்

70 ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த ராணி 2ம் எலிசபெத் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.

உலகிலேயே நீண்ட ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். 953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு இவர் ராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரின் 70 ஆண்டுகால ஆட்சியில் 14 பிரிட்டன் பிரதமர்கள் பதவிவகித்துள்ளனர். 16 நாடுகளின் ராணியாகவும் இவர் இருந்துள்ளார். இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ராணி எலிசபெத் பயணம் செய்துள்ளார். இவர் கால்படாத நாடே இருக்காது.

இவரின் மறைவை அடுத்து பிரிட்டன் நாட்டின் மன்னராக இளவரசர் சார்லஸ் மூனறாம் சார்லஸ் என்ற பெயரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இங்கிலாந்து அமைச்சரவை அறிவிப்பு.. உள்துறை அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண் ! யார் இந்த சுயெல்லா ?