உலகம்

நைஜீரியாவில் இருந்து லண்டன் திரும்பியவருக்கு குரங்கு அம்மை நோய்.. உலக நாடுகள் பீதி #5IN1_WORLD

அதிவேக இணைய சேவையை வழங்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 53 செயற்கைக்கோள்களை பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் விண்ணில் செலுத்தியது.புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவில் கொரோனாவல் ஒருவர் பலி!

வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றி தகவல்கள் வெளிவந்தது இல்லை. ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது.இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12-ந் தேதி அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளார். அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததாலும், சிகிச்சை வசதிகள் இல்லாததாலும் மரண பீதி நிலவும் சூழல் உருவாகி வருகிறது.அந்த வகையில் கொரோனா தொற்று பலி அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஒருவரது இறப்பை மட்டுமே அரசு உறுதி செய்துள்ளது.

மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த நிலையில் பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷா என்கிற பயங்கரவாதி கைபர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.இறுதியில் ஹாசன் ஷா மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.

ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்!

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது.ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.இந்த நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனியாஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் கண்டுபிடிப்பு!

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் இவர்கள் பயணிக்கவில்லை. இவர்களுக்கு இந்த தொற்றானது எவ்வாறு பாதித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.

Also Read: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!