உலகம்

பள்ளி மாணவர்களை மிரட்டும் கொரோனா.. சீனாவில் பரவும் வைரஸ்: உலக நாடுகள் அச்சம்!

பீஜிங்கில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சீன தலைநகர் பீஜிங்கில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களில் 4 பேருக்கும் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான பகுதியில் 24 ஆயிரத்து 326 பேருக்கு சமூகத் தொற்று பதிவாகி உள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் இல்லை.

ஒடேசா மீது ரஷியா ஏழு ஏவுகணைகளை ஏவியது!

ஒடேசா மீது ரஷியா ஏழு ஏவுகணைகளை நேற்று ஏவியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது.உக்ரைனின் ஒடேசா மீது ரஷியா ஏழு ஏவுகணைகளை ஏவியது என்றும் அதில் இரண்டு இடைமறிக்கப்பட்டது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் ஒடேசா மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானில் சுற்றுலா படகு கவிழ்ந்தது விபத்து!

ஜப்பானில் 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியதில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இலங்கைக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கின்றன!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் ஆஸ்பத்திரிகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதை இலங்கையின் சுகாதார மந்திரி சன்ன ஜெயசுமனா உறுதி செய்துள்ளார். 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று, இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், இது வருகிற 27-ந் தேதி இலங்கையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார்.இதைப்போல, 34 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை, இந்தோனேஷியாவும் அனுப்ப உள்ளதாகவும், அது ஒரு வாரத்துக்குள் இலங்கை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.

Also Read: ’இதற்கு முடிவே இல்லையா?’.. சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார வாகனத்தின் பேட்டரி : ஒருவர் பரிதாப பலி