உலகம்

"கொரோனா என ஒன்று இல்லவே இல்ல.. இது போலி" : பிரச்சாரம் செய்த பாதிரியாருக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உலகமே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் கொரோனா தொற்று முழுமையாக ஒழியவில்லை. தற்காலிகமாகத் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களுடன் இனி கொரோனாவும் வாழும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றை விட வீரியமான ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றும் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 23 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் போலியான தொற்று எனக் கூறிய துறவிக்கு ரஷ்ய நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஃபாதர் செர்ஜி. இவர் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, தவறான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் தேவாலயத்திற்கு வரும் மக்களிடமும் கொரோனா குறித்து தவறான கருத்துகளைக் கூறியுள்ளார்.

இதனால் இவருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், இவர் கொரோனா ஒரு போலியான நோய் என்றும் அதிபர் விளாடிமிர் புதின் சாத்தானின் முகம் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையடுத்து அவரை போலிஸார் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கைது செய்தனர். ஃபாதர் செர்ஜி மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மாஸ்கோ இஸ்மாயிலோவோ மாவட்ட நீதிமன்றம் செவ்வாயன்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாதர் செர்ஜி சோவியத் ரஷ்யா இருந்த ஆட்சியில் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளார். மேலும் 1986ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக இவர் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். பிறகு தேவாலயப் பள்ளியில் சேர்ந்து துறவியாக மாறியுள்ளார்.

Also Read: பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை; நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு!