உலகம்

“Light மாற்றுவதற்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம்.. வருடத்திற்கு 2 நாள்தான் வேலை” : அது என்ன வேலை தெரியுமா?

உயரமான பகுதிகளுக்குச் சென்றாலே பலருக்கும் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். அதிலும், உயரமான பகுதிக்குச் சென்று உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலையை கிடைத்தாலும் பலரும் அதனை மறுத்து விடுவார்கள். அப்படி இருக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1,500 மீட்டர் உயரம் உள்ள டவரில் தனி நபராக எறி வேலை பார்த்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சவுத் டக்கோடா என்ற பகுதியில் 1500 மீட்டர் உயரத்திற்கு ஒரு டெலிபோன் டவர் உள்ளது. இதன் உச்சியிலிருந்த பார்த்தால் இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு நன்றாகவே தெரியும்.

இந்த டவரின் உச்சியில் மின்விளக்கு (Light) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும். ஆனால் இந்தவேலைக்கு பலரும் மறுப்புத் தெரிவித்த நிலையில், கெவின் என்ற இளைஞர் வருடத்திற்கு இரண்டு முறை 1500 மீட்டர் கொண்ட இந்த டவரில் ஏறி மின்விளக்கு மாற்றும் பணியைச் செய்து வருகிறார்.

இந்த வேலைக்காக இவர் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊதியமாக வாங்குகிறார். இது இந்திய மதிப்பில், சுமார் 28 லட்சம் ஆகும். இரண்டு நாளைக்கு வேலை செய்வதற்கு மட்டும் கெவின் இந்த தொகையைப் பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது ஒரு சவாலான வேலைதான். இந்த உயரத்திற்குச் செல்லும்போது பதட்டமாக இருக்கும். நான் 1500 மீட்டர் உயரத்திலிருந்து மூன்று வகையான காலநிலை மாற்றத்தையும் பார்த்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கெவின் எட்டு ஆண்டுகளாக அனைத்து வகையான டவர்களிலும் ஏறி வேலை பார்த்துள்ளார். 1500 மீட்டர் டவரில் ஏறிவேலை பார்ப்பதை ஒருவர் ட்ரோன் கேமராவின் மூலம் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட 48 மணி நேரத்திலேயே 60 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

இவர் வேலைபார்க்கும் வீடியோ கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. கெவின் வேலை பார்க்கும் வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு இந்த வேலை கிடைத்தால் நீங்க செல்வீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: ஒளிப்பதிவாளரைக் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட அமைச்சர்... தலை பாறையில் மோதி பலியான சோகம் - என்ன நடந்தது?