உலகம்

"பெண்களை கொன்று உடல்களை நாய்களுக்கு உணவாக வழங்குவார்கள்": தாலிபான்களால் கண்களை இழந்த பெண் அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைபற்றியதை அடுத்து 'இனி எங்கள் தலைமையில்தான் ஆட்சி நடக்கும்’ என அறிவித்துள்ளனர். மேலும் 'அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்துவிட்டோம். எனவே நீங்கள் வேலைக்கு வரவேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையடுத்து, 'பெண்கள், குழந்தைகள், வெளிநாட்டினர் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது' எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களின் பேச்சுக்கு எதிர்மாறான சம்பவங்களே நடைபெற்று வருகின்ரன.

பெண்கள் வேலைக்குச் செல்லலாம் எனக் கூறிய தாலிபான்கள் பெண் பத்திரிகையாளரை வேலைக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் தாலிபான்களை எதிர்த்துப் போராடிய முதல் பெண் கவர்னரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாலிபான்கள் பெண்களைக் கொன்று நாய்களுக்கு உணவாக வழங்குவார்கள் என தாலிபான்களால் பாதிக்கப்பட்ட கதேரா என்ற பெண் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் கதேரா. காவலராகப் பணியாற்றிய இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பணி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தாலிபான்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

மேலும் கதேராவின் கண்களைக் கத்தியால் தோண்டி எடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்த போது இவர் இரண்டு மாத கர்ப்பிணி. மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தாலிபான்கன் நாட்டை கைப்பற்றியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அவர்கள் முதலில் எங்களை (பெண்கள்) கொடுமைப்படுத்துவார்கள், பின்னர் தண்டனைக்கான எடுத்துக்காட்டாக எங்கள் உடல்களை வீசிவிட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் நாய்களுக்கு உணவாக எங்கள் உடல் வீசப்படும்.

அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்த நான் அதிர்ஷ்டசாலி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது. தாலிபான்களுக்கு அடிபணியவில்லை என்றால் பெண்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வீதிகளில் மரணத்தைச் சந்திப்பார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: ”தாலிபன்கள் ஒருபோதும் மாறப்போவதில்லை” - கதறும் ஆப்கானியர்கள்.. மனதை உருக வைக்கும் காணொலி!