உலகம்

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரம் - தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த மே மாதம் ரோமினா அஷ்ரஃபி எனும் 14 வயதான சிறுமியின் காதலை ஏற்க மறுத்த அவரது தந்தை அவரைக் கொலை செய்தார். இந்த ஆணவ கொலை தொடர்பாக ரோமினா அஷ்ரஃபியின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார்.

ரோமினாவின் படுகொலைக்கு நியாயம் கேட்டு பலரும் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணவக் கொலையைத் தடுக்க இந்தத் தண்டனை போதுமானதல்ல என அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

Also Read: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மாயம் - கொல்லப்பட்டாரா எனக் கிளம்பும் சந்தேகம்!