உலகம்

“2020 இறுதிக்குள் 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்” - மைக்ரோசாஃப்ட் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல துறைகளையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திதுள்ளதால் உலகம் முழுக்க வேலையிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் இந்த வருடம் 25 கோடி பேர் வரை வேலையிழப்பார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கணித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் செயல்படாமல் கிடக்கின்றன.

வீட்டில் இருந்து வேலைசெய்யக்கூடிய துறைகளில் கூட பலர் பணி நீக்கம், சம்பள பிடித்தம் என தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகள் இன்னும் தீவிரமாகும். உலகளவில், இந்த வருட இறுதிக்குள் 25 கோடி பேர் வேலையிழப்பார்கள் என்பது அதிர்ச்சிகரமான ஒரு விகிதம்.

அமெரிக்காவில் மட்டுமே 3.5 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உயரவிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 2.1 கோடி பேர் வேலையிழக்கவுள்ளார்கள். இதேபோன்ற சவால்களை மற்ற நாடுகளும் எதிர்கொள்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே மாதத்தில் 20-29 வயதுக்குட்பட்ட 2.7 கோடி பேர் வேலையிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்- விளைவு என்னாகும்?