உலகம்

சீனாவில் வீசத் தொடங்கியது கொரோனாவின் இரண்டாவது அலை - விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடல்!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே முன்பே கணிக்கப்பட்டதை விட சீனாவில் இரண்டாவது அலை தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாவது அலையானது தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதன் காலை நிலவரப்படி பெய்ஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிகொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், புதிய அறிகுறிகளை கொரோனா வைரஸ் கொண்டுள்ளதால், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: ஒரே நாளில் 12,881 பேர் பாதிப்பு; 334 பேர் பலி: இனியும் வீண் பெருமை பேசாமல் விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?