உலகம்

“ஒரே நாளில் 2,400 பேர் பலி - மொத்தம் 61,669 பேர் உயிரிழப்பு” : மீளமுடியாமல் தவிக்கும் அமெரிக்கா!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 228,026 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 3,218,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000,032 பேர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 5,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 2473 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,064,572 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61,669 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 306,158 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,474 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக நியூஜெர்சியில் 116,264 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,770 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நிலவும் மோசமான நிலையில் இருந்து மீளமுடியாமல் அமெரிக்கா திணறுகிறது.

Also Read: உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது? #CoronaCrisis