உலகம்

#Corona : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு!

சீனாவின் வூஹான் நகரில் பிறந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. கொரொனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.

Also Read: கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கர்நாடகா, தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை!

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஜஸ்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அண்மையில் பிரிட்டன் சென்று வந்ததன் மூலம் கனடா பிரதமரின் மனைவி சோபிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லேசான பாதிப்பே சோபிக்கு இருக்கிறது என்றும், உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தனக்கு எந்த கொரோனா அறிகுறிகளும் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, வீட்டில் இருந்தபடியே அரசு வேலைகளை கவனிப்பதாகவும், வீடியோ காணொளி மூலம் ஆலோசனைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கனடா நாட்டில் கொரோனா வைரஸால் 142 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கோரத்தாண்டவமாடும் கொரோனா : ஜெர்மனியில் 70% மக்கள் பாதிப்படைய வாய்ப்பு- ஏஞ்சலா மெர்கல் ‘பகீர்’ எச்சரிக்கை!