உலகம்

பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் பொருள்... 33000 பவுடர் டின்களை திரும்பப்பெறும் ஜான்சன்ஸ் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

சமீபத்தில் கூட அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோ என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பொருளால் தனக்கு மார்பகம் வளர்ந்துவிட்டதாக கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, 33,000 பவுடர் டின்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்துவதால் புற்றுநோய் எற்பட வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட J&J பவுடர் டின்னில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் இருந்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு பவுடர் டின்னில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்தபோது அதில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட சில ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரை நுகர்வோர் பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு பகுதி பவுடர்களில் தான் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருக்கலாம் என எண்ணி 33,000 பவுடர் டின்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.