உலகம்

குர்திஷ் இன மக்களின் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி : சிரியாவில் மீண்டும் போர் பதற்றம்

அரபு குடியரசு மத்தியக் கிழக்கில் அமைந்துள்ள போர் சூழல் மிகுந்த நாடு சிரியா. இது மேற்கில் லெபனான் நாட்டையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

சிரியாவின் துருக்கி, ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் குர்திஷ் இன மக்கள் வாழ்கின்றனர். தற்போது இவர்களை ஒழித்துக்கட்ட துருக்கி தன் ராணுவ பலத்தை பயன்படுத்தி சிரியா மீது பெரும் போர் தொடுத்து வருகிறது.

குர்திஷ்களுக்கு என தனிநாடு கிடையாது. ஆனாலும் தங்களுக்கெனத் தனிநாடு வேண்டும் என நீண்ட நாளாக குர்திஷ் படையினர் போராடி வருகின்றனர். சிரியாவில் இருந்த ஐ.எஸ் படைகளை விரட்டியடிக்க கடந்த காலங்களில் அமெரிக்கா ராணுவத்துடன் போர் புரிந்தனர்.

குர்திஷ் மக்களை பாதுகாக்க ஒய்.பி.ஜே எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சிரியா மற்றும் அமெரிக்கா ராணுவத்துடன் நட்புடன் பழகி வந்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே குர்திஷை அழிக்கும் நோக்கில் தான் துருக்கி செயல்பட்டது.

குர்திஷ் படை

இந்நிலையில் நீண்ட காலமாக முடிவே இல்லாமல் தொடரும் போருக்கு அமெரிக்கா துணைபோகாது என்று அறிவித்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், சிரியாவில் இயங்கி வந்த தனது ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட துருக்கி தற்போது குர்திஷ் மக்கள் மீது போர் தொடுத்து வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட குர்திஷ் கூடாரங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இருப்பிடத்தில் இருந்து குடிபெயர்ந்து வருகின்றனர்.

துருக்கி தாக்குதலுக்குப் பயந்து சிரியா மற்றும் குர்திஷ் மக்கள் துருக்கியின் எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் துருக்கியின் எல்லைப்பகுதியில் வாழும் சொந்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி படைகளுக்கு எதிராக குர்திஷ் படைகளும் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதல் நடத்தும் குர்திஷைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.