உலகம்

இந்தப் படிகளில் அமர்ந்தால் 30,000 ரூபாய் அபராதம்... அப்படி என்ன ஸ்பெஷல்?!

ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1726-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. ஸ்பானிஷ் படிகளின் உச்சியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் எப்போதும் சூழ்ந்திருக்கும் இடமான ரோம் நகரின் வரலாற்றுச் சின்னங்களை அவற்றின் அருமை தெரியாமல் சுற்றுலா பயணிகள் சிதைத்து விடுவார்களோ என இத்தாலி அரசு அஞ்சியது. இதையடுத்து ஸ்பானிஷ் படிகளின் புகழையும், தொன்மையையும் பாதுகாக்க இத்தாலி அரசு புதிய முடிவை எடுத்தது.

ஸ்பானிஷ் படிகள் உட்பட மேலும் சில உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களை சுற்றுலா பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பது உள்ளிட்டவற்றை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலி அரசு அறிவித்தது.

அதன்படி தற்போது ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்கும் பணியில், சிறப்பு சுற்றுலா பிரிவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை போலீசார் விசில் அடித்து எச்சரிப்பார்கள். அதையும் மீறி அங்கு அமர முயன்றால் அவர்களுக்கு 400 யூரோ அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.