Viral

விமானம் புறப்படுவதில் சற்று தாமதம்... அறிவிப்பு வெளியிட்ட ஊழியரை தாக்கிய பயணி... காரணம் என்ன ?

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மக்கள் பலரும் கோவா செல்வது வழக்கம். அந்த வகையில் 6E-2175 என்ற விமானம் சம்பவத்தன்று கோவா புறப்பட தயாராக இருந்தது. இதனால் பயணிகள் பலரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விமானம் புறப்படுவதற்காக காத்திருந்தனர். ஆனால் விமானம் புறப்படவில்லை,

இதனால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியிருந்தனர். தொடர்ந்து விமானம் புறப்பட தாமதம் ஆனதால், அங்கிருக்கும் பயணிகள் சிலர் ஊழியர்களிடம் விவரம் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது விமானத்தின் இணை கேப்டன் அனுப் குமார் நேரில் வந்து பயணிகளிடம் விமானம் புறப்பட தாமதமாகும் என்றும், பனிமூட்டம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் கோபம் கொண்ட பயணி ஒருவர், விமானியை சட்டென்று தாக்கினார். இந்த தாக்குதலில் விமானி சற்று தடுமாறி கீழே விழ, அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி நிறுத்தினர். தொடர்ந்து பயணியையும் கட்டுப்படுத்தி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமானியை தாக்கிய அந்த நபர் உடனே, விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரிக்கையில், அவர் பெயர் சாஹில் கட்டாரியா என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து தன்னை தாக்கியதற்காக அந்த நபர் மீது பாதிக்கப்பட்ட விமானி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில் அந்த பயணி, மஞ்சள் நிற உடை அணிந்துள்ளார். விமானி பேசிக்கொண்டிருக்கும்போதே தாக்கியுள்ளார். இந்த வீடியோவை இணையவாசி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "இன்று எனது குழு 13 மணி நேரம் விமானத்துக்காக காத்திருந்தது. அதில் ஒருவர் மிகவும் சோர்வடைந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 5-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி.. பதைபதைத்த தெலங்கானா - வைரலாகும் திக் திக் வீடியோ !