Viral

Whatsapp-ஐ Uninstall செய்யும் பயனர்கள் - புதிய பிரைவசி பாலிசியால் என்ன சிக்கல்?

வாட்ஸ்-அப் தனது தனியுரிமைக் கொள்கையை (Terms and Privacy Policy) மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பயனர்களின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும்.

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கிய பிறகு பல்வேறு புதிய சேவைகள் கொண்டுவரப்படுகின்றன. வாட்ஸ்-அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டுள்ளது வாட்ஸ்-அப்.

வாட்ஸ்-அப் செயலி தன் பயனாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அனுப்பிய அறிவிப்பில் (Pop-up), பயனர்களின் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் உள்ளிட்ட சுயவிவரங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் பகிர ஒப்புதல் கேட்டு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ்-அப் கணக்கு தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்பதை விருப்பத் தேர்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பயனர்கள் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப்பின் மாற்றியமைக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையின்படி, பயனர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் நேரம், அதிகமாக பயன்படுத்தும் வசதிகள், இருப்பிட விவரம், ஐபி முகவரி போன்றவற்றை பதிவு செய்துகொள்ளும்.

இந்த தகவல்கள் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களுக்கு பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பயனர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிக்னல், டெலிகிராம் போன்ற என்கிரிப்டட் செயலிகளை பயன்படுத்துமாறு டெல்ஸா நிறுவன அதிபர் எலோன் மஸ்க் பரிந்துரை செய்துள்ளார்.

Also Read: ”திராவிட கருத்தியல் பேசும் பக்கங்களை முடக்கும் ஃபேஸ்புக்” - தி.மு.க தலைவருக்கு ‘We Dravidians’ கடிதம்!