Viral

''21 நாட்கள் உழைப்பு; 25 அடி ஆழத்தில் தண்ணீர்'' : ஊடரங்கில் சாதித்த தம்பதியரின் வெற்றிக் கதை!

கொரோனா தொற்று காரணமாக நாடே ஊரடங்கால் முடங்கியுள்ளது. பல்வேறு தரப்பினரின் தொழில்களும் நசிந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வேலை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கஜானன் மற்றும் அவரது மனைவி இணைந்து, 21 நாட்கள் கடுமையாக உழைத்து கிணறு தோண்டி உள்ளனர். வாஷிம் மாவட்டம் கார்கேடா கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, ஊரடங்கு காலத்தில்செய்த செயற்கரிய செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து கஜானன் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெளியில் எங்கும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால், ஏதாவது செய்ய வேண்டும் என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். அதன்படி வீட்டு வளாகத்தில் கிணறு தோண்ட முடிவு செய்து வேலையைத் தொடங்கினோம்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எங்களை கிண்டல் செய்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியை தொடர்ந்து செய்தோம். 21-வது நாளில் 25 அடி ஆழம் தோண்டியபோது ஊற்று வெளிப்பட்டு தண்ணீர் பெருக ஆரம்பித்தது” என்று கூறினார்.

இதற்கு முன்பாக கேரளாவில் ஒரு தம்பதியினர் ஊரடங்கு காலத்தில் இதுபோன்றே கிணறு தோண்டியது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'ஊரடங்கில் சிக்கிய தனது மகனை 1400 கி.மீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்து மீட்ட வீரத்தாய்' : ருசிகர சம்பவம்!