Viral

நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாகக் கூறி ரூ.75 லட்சத்தைப் பறித்த மோசடி கும்பல் : பகீர் பின்னணி!

இராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் பிரதீப். அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டு கொல்கத்தா சென்றுள்ளார். இதனை அறிந்த தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இராமநாதபுரம் தனிப்படை போலீசார் கொல்கத்தா சென்று அந்த இளைஞரை மீட்டுள்ளனர். இதனையடுத்து பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்யச் சென்றதாகவும், மோசடி செய்யப்பட்டது குறித்தும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரதீப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இணையதளத்தைப் பயன்படுத்தும்போது சில பெண்களின் புகைப்படங்கள் விளம்பரப் பகுதியில் தோன்றியுள்ளன. அதில் சினிமா நடிகைகளின் புகைப்படமும் இடம்பெற்றிருந்துள்ளது. அத்துடன் இதில் யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்து ஆர்வத்துடன் அந்த இணையதள பக்கத்திற்குள் சென்றுள்ளார் பிரதீப்.

அதற்கு முன்னதாக அந்தப் பக்கத்தில் தேடும் நபர் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதனையும் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் சில நடிகைகளின் புகைப்படம் தோன்றி, இதில் யாரைச் சந்திக்கவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர் நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அந்தப் படத்தை கிளிக் செய்துள்ளார். அதை உறுதி செய்வதற்கான கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரும் காஜலை சந்திக்கும் ஆர்வத்தில் எதையும் யோசிக்காமல் ரூ.50 ஆயிரத்தை அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியுள்ளார்.

உடனடியாக இவ்வளவு பெரிய தொகையை அனுப்பமுடியும் என்றால் பொருளாதார வசதி உடையவர் தான் என எண்ணிய மோசடிக் கும்பல் இளைஞரை மேலும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறார் எனத் தெரிவித்து, இன்னும் இரண்டு நாட்களுக்குள் உங்களைச் சந்திப்பார் என அவரின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளனர். பின்னர் அதற்கான தொகை என ரூ.75 லட்சத்தை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பச் சொல்லி பெற்றுக்கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு தான் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாந்துவிட்டோம் எனும் உண்மை அவருக்குத் தெரிந்துள்ளது. இதனை யாரிடம் சொன்னாலும் அவமானப்படுத்துவார்கள் என எண்ணி வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளச் சென்றதாக பிரதீப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சிவகங்கை மணிகண்டனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சினிமா தயாரிப்பாளர் சரவணகுமார் படத்தின் தயாரிப்பிற்காக சில நண்பர்கள் பணம் தருவார்கள் என்றும் அதனை உங்கள் வங்கிக்கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் சொன்னதாகவும், அதன்படி தான் தொகையைப் பெற்றதாகவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணகுமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நடிகையின் பெயரில் இளைஞரிடம் இருந்து பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் பறிகொடுத்துவிட்டதும், மீதமுள்ள தொகை சரவணகுமாரின் வங்கிக் கணக்கில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர், சரவணகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த மோசடி விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வேறு யாரேனும் இதுபோன்று ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.