Viral

வேலையிலேயே இல்லாத அதிகாரிக்கு 3 கோடி சம்பளம்: இப்படித்தான் ஏர் இந்தியா நஷ்டம் ஆச்சா ? - அதிர்ச்சி சம்பவம்

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் இந்த இழப்பைக் காரணம் காட்டி, ஏர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியையும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.

அதே நேரம், தன்னுடைய நிறுவனத்தில் பணியிலேயே இல்லாத அதிகாரி ஒருவருக்கு, பல லட்சங்களில் மாத சம்பளம் அளித்ததாக அந்நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் எழுதப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியாவின் முன்னாள் ஊழியர் அதுல் சந்திரா, இவர் 2017ம் ஆண்டு வரை ஏர் இந்தியா நிறுவனத்தில் இணை பொது மேலாளராக பணியாற்றினார். பின்பு சிவில் விமானப் போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தில் விமான போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் சேர்ந்த பின்னும் அவரின் வங்கி கணக்கிற்கு ஏர் இந்தியா நிறுவனம் பல லட்சங்களை சம்பளமாக செலுத்தியுள்ளது. அதாவது 2017ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, கடந்த இரண்டு வருடங்களாக மாத மாதம் சம்பளத்தை அளித்துள்ளது. இந்த சம்பள விவகாரம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, ம்பளத்தை பெற்றது குறித்து அதிகாரி அதுல் சந்திராவுக்கு ஏர் இந்தியா நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அதுல் சந்திரா, “நான் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பணம் தன் கணக்கில் வந்தது. ஆனால், இதுவரை 80 லட்சம் ரூபாய் வந்துள்ளது. அதை திருப்பி செலுத்தி விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில், அதுல் சந்திராவுக்கு ஏர் இந்தியா இதுவரை 3 கோடி ரூபாய் வரை சம்பளத்தை செலுத்தியது தெரியவந்துள்ளது. இவரைப் போல மேலும் இன்னும் எத்தனை பேருக்கு இப்படி ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தை அள்ளி கொடுத்து இழப்பை சந்தித்துள்ளது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஏர் இந்தியாவில் இருந்து சம்பளப் பணம் வருவது குறித்து அதுல் சந்திரா தெரிவிக்காது குற்றமாக இருந்தாலும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னும் அந்த அதிகாரிக்கு சம்பளம் வழங்கி இருப்பது ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களின் மிகப்பெரிய தவறு.

ஏற்கனவே, மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் இதுபோன்ற தவறுகளால் மீட்க முடியாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது பா.ஜ.க அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு துணைபோகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.