Tamilnadu

16 வழக்குகள் நிலுவை... பெண் யூடியூபருக்கு கொலை மிரட்டல்: யூடியூபர் மணிகண்டன் கைது! (முழுப் பின்னணி)

கோவை, சிவானந்தா காலனி, டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் கடந்த ஓராண்டாக ‘நான் கற்றது Exclusive Store’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் கே. விக்னேஷ்வரி. இவர் ‘nan katrathu’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்த வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24, 2026 முதல் திருச்செந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது ‘mani_history_mad’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ‘Tiruchendur Manikandan’ என்ற யூடியூப் சேனலிலும் விக்னேஷ்வரியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது அனுமதியின்றித் திருடிப் பதிவிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விக்னேஷ்வரி நேற்று (நவம்பர் 13) கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது தொழில் மற்றும் விற்பனைப் பொருட்கள் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் மணிகண்டன் பரப்பி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண் என்றும் பாராமல், தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இழிவுபடுத்தியதோடு, "உன்னை இத்துடன் முடித்துவிடுவேன்" எனக் கொலை மிரட்டல் விடுத்து, தனது தொழிலுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், சைபர் தடயங்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில், குற்றம் சாட்டப்பட்ட திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கர நாயனாரின் மகன் மணிகண்டன் (37), நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தலைமறைவாகப் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊட்டிக்குச் சென்று, அங்கு பதுங்கியிருந்த மணிகண்டனை இன்று (நவம்பர் 14) அதிரடியாகக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி மேற்கொண்ட தொடர் புலன் விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே 16 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.