Tamilnadu

இவருக்கு பதில் இவர்... மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விஜய்... தீபக் நாதன் கடும் கண்டனம்!

கடந்த திராவிட மாடல் ஆட்சியில், முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றுதான் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் (விடியல் பயணம்). இந்த பயணத்தின் மூலம் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். இந்த சூழலில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தாத தவெக அரசு, விடியல் பயண திட்டத்தின் தொடர்ச்சியாக, பெயரை மாற்றி 'வெற்றி பயணம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, இதில் பெண்கள், திருநர்கள் உள்ளிட்டோர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது. திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் தீபக் நாதன் இதற்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்தார்.

எனினும் தவெக அரசு தற்போது வரை இந்த திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தவில்லை. மேலும் வழக்கம்போல் தனது பொறுப்பில் உள்ள துறைகளை, வேறொரு துறையை சேர்ந்த அமைச்சர்கள் கையாளுவதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் வகையில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடு உள்ளதாக திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் தீபக் நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆய்வை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நடத்துவது ஏன்? துறை முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும்போது இந்த முரண்பாடு எதற்காக?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும்போது, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிர்வாகப் பொறுப்பு யாரிடம் உள்ளது? அத்துறையின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, நலத்திட்டங்களின் அமலாக்கம் ஆகியவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர், அந்தத் துறையின் ஆய்வை ஏன் நேரடியாக மேற்கொள்ளவில்லை?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருக்கும்போது, அத்துறையின் ஆய்வை சமூக நலத்துறை அமைச்சர் மேற்கொள்வதற்கான நிர்வாக அடிப்படை என்ன? இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் தொடர்பான முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்படுவதையும், நலத்திட்டங்கள் தடையின்றிச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லையே! முதலமைச்சருக்குத் தெரியுமா?

மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ள பலருக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிறரின் உதவியின்றி அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத பல மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் பராமரிப்பு உதவித்தொகை என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாகும். இத்தகைய சூழலில், உதவித்தொகை கிடைக்காமல் மாதக்கணக்கில் காத்திருப்பது அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இந்த நிலை முதலமைச்சருக்குத் தெரியுமா? நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலா அல்லது நிர்வாகத் தாமதமா? தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததற்கான காரணத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலித்து, தகுதியுடைய அனைவருக்கும் உரிய நிதியுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியல் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய அரசு, வெற்றி பயணத்தில் ஏன் புறக்கணிக்கிறது?

கடந்த திமுக ஆட்சியின்போது பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று, மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து, அவர்களையும் அரசின் நலத்திட்டங்களில் உள்ளடக்க முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.

ஆனால், தற்போது ‘வெற்றி பயணம்’ திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என்று சட்டமன்றத்தில் சமூக நலத்துறை அமைச்சர் அறிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த அறிவிப்பு ஏன் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை?

சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமே அரசின் கடமையா? அந்த அறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாமா?

விடியல் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய அரசு, வெற்றி பயணத் திட்டத்தில் அவர்களுக்கான பயன்களை உறுதிப்படுத்துவதில் ஏன் தாமதிக்கிறது? இதற்கான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.

துறை யாருடைய பொறுப்பில் இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டங்கள் என்பது அரசின் கருணையால் வழங்கப்படும் சலுகைகள் அல்ல; அவை சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமைகள்.

எனவே, தமிழக அரசு உடனடியாக:

1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாகத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

2. சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆய்வை மேற்கொள்வதற்கான நிர்வாக அடிப்படையைத் தெளிவுபடுத்த வேண்டும்.

3. மார்ச் மாதத்திற்குப் பிறகு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

4. தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நிலுவையில் உள்ள பராமரிப்பு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

5. ‘வெற்றி பயணம்’ திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கான நடைமுறைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு உரிமைக்காகவும் மாற்றுத்திறனாளிகள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா?

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது அறிவிப்புகளை வெளியிடுவதும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரத்தில் தாமதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பொறுப்பு யாரிடம் உள்ளது என்ற நிர்வாகக் குழப்பத்திற்கும், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் நிலவும் தாமதத்திற்கும் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அறிவிப்புகளோடு முடிந்துவிடக் கூடாது; அவை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே உண்மையான சமூகநீதி!

Also Read: த.வெ.க வழங்குவது ஆட்சியா.. க்ரைம் த்ரில்லர் படமா? : கீதா ஜீவன் கடும் சாடல்!