Tamilnadu

“யார்கிட்ட விளக்கம் கேட்க போறாரு?” - இந்து அறநிலையத்துறை Office உள்ளே புகுந்த மழைநீர்.. சேகர்பாபு கேள்வி!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் அதி கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, நுகங்கம்பாக்கத்தில் சுமார் 15 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆட்சி காலங்களில் மழை பெய்யும் பொழுது ஆட்சியாளர்கள் உள்பட அனைவரும் களத்தில் இறங்கி, மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பர்.

ஆனால் நேற்று தொடர்ந்து பெய்த மழைக்கோ, அதனால் ஏற்பட்ட விளைவுகளை கூட களத்தில் இறங்கி ஆய்வு பண்ண கூட இந்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என மக்கள் விமர்சித்துவ வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதோடு, மரங்கள் சரிந்து விழுந்து ஒரு சில இடங்களில் விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சயம அறநிலையத்துறை அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கியுள்ளது, அங்கிருக்கும் ஆவணங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலையில், இந்த நிகழ்விற்கு திமுக முன்னாள் இந்து சயம அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், இதைவிடப் பெருமழை பெய்த காலங்களில்கூட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இவ்வாறு மழைநீர் தேங்கியதில்லை. சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறக்கத்தில் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையும் அதே அலட்சியப் போக்கில் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

அனைத்து விவகாரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கும் ஆணையர், தனது அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியிருப்பதற்கு யாரிடம் விளக்கம் கேட்கப் போகிறார்?

கோயில்களின் நிர்வாகம், சொத்துப் பாதுகாப்பு, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பது எனப் பல முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட துறையின் அலுவலகத்திலேயே மழைநீர் தேங்குவது கவலைக்குரியது. நீர் உட்புகும் அபாயம் இருந்தால், நூலகங்களிலும் ஓலைச்சுவடிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உள்ள அரிய ஆவணங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்படும் நிலையில், நடைமுறையில் இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? வடிகால் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டனவா? மழைநீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா?

அறிவிப்புகளும் சுற்றறிக்கைகளும் மட்டும் நிர்வாகமல்ல; களத்தில் தெரியும் செயல்பாடுகளே நிர்வாகத்தின் அளவுகோல்! மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன, பொறுப்பான அதிகாரிகள் யார், அரிய ஆவணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பவை குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற அலட்சியம் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Also Read: 135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!