Tamilnadu
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
நாகை மாவட்டம், சிந்தாமணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த சூழலில் நேற்று (அக்.16) இவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் 5 பேர் கொண்ட DRI அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சட்டம் ஒழுங்கு பற்றியும், போதை கலாச்சாரம் பற்றியும் வாய்கிழிய முதலமைச்சர் விஜய் பேசி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகியே அதுவும் தனது சொந்த வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு :-
"பூபாலன் எனும் தவெக நிர்வாகியிடமிருந்து 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைக் கலாசாரத்தை ஒழிப்பேன் என வீரவசனம் பேசியவர்கள் இன்றைக்குப் போதைப் பொருளை ‘ஒளித்து’ வைத்துத் தமிழ்நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தனது அமைச்சர் ஒருவர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு வந்த போதே, அதன் மீது விசாரணை நடத்தாமல் முதலமைச்சர் அவரைக் காப்பாற்றினார். இப்போது தவெக நிர்வாகியே இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார் என்றால், இவ்வளவு துணிச்சலைத் தந்தவர்கள் யார்? அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடுதான் இத்தனை நாளாக இது நடைபெற்றதா?
ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."
ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே தவெக கில்லி சரத், போதை பொருள் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சி அவர் மீது ஒரு வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததன் விளைவு தற்போது அக்கட்சியின் நிர்வாகிகள் இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Also Read
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!
-
“யார் திறந்தால் என்ன? - அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே கழகத்தின் பணி” : அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி பதிவு!