Tamilnadu

போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் ஐந்து பேர் கொண்ட டிஆர்ஐ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.

சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?

ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?

ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?

இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!