Tamilnadu
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது என ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாக மட்டுமின்றி, கோவையின் புதிய அடையாளமாகவும் ஆகியிருக்கின்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழா கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அந்த அறிவுலகம் அமைப்பதற்கு, திராவிட மாடல் அரசு மேற்கொண்ட பணிகளைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கண்டு அலறுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. கழகத் தலைவர் பொறாமை கொண்டு பேசுவதாக ஆதவ் அர்ஜூனா தனது பேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும் பிற திட்டங்களையும் தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி முதல் திராவிட நாயகர் ஆட்சி வரையிலான கழக அரசின் நிர்வாக இலக்கணம். சத்துணவை முட்டையுடன் கூடிய முழுமையான சத்துணவாகவும், கிருஷ்ணா நதி நீர் சென்னையின் தாகத்தைத் தணிக்கும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சியில் தீர்மானம் மட்டும நிறைவேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தை அதே பெயரில் தொடங்கி, அதற்குரிய புதிய கட்டடத்தைக் கட்டியதும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மேலும் சிறப்புடன் தொடரவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.
2011-21 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பேருந்து முனையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் கால்வாசிகூட நிறைவேறாத நிலையில், மக்கள் பயன்பாட்டினைக் கருதி அவற்றை முழுமையாக நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அத்தகைய நிர்வாகத் திறன் ஏதுமற்ற த.வெ.க அரசின் முதல் போட்ட அமைச்சர் தி.மு.கவின் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையாவது இருக்கிறதா?
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணியிலோ, கோவை பெரியார் அறிவுலகம் கட்டடத்திலோ பெயிண்ட் அடிக்கும் வேலையையாவது த.வெ.க அரசு செய்திருக்குமா? முழுமையாகப் பணிகளை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. தேர்தல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சிரிப்புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்சியில் இவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் அறிவாற்றல் வளம் பெறவும் திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவற்றைப் புதிய ஆட்சியாளர்கள் திறந்து வைப்பதில் தி.மு.கவுக்கும் எங்கள் தலைவருக்கும் எந்தவிதப் பொறாமையும் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெருமைப்படுகிறோம். வள்ளுவர்கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து முனையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதன்மைக் கட்டடம் உள்ளிட்ட பலவும் தி.மு.க ஆட்சியின் விளைவுகள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மூடர் கூட்டத்தின் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும்தான் பொறாமைக் குணத்துடன், மக்கள் நலத் திட்டங்களை இழிவுப்படுத்தும் வகையில், “தி.மு.க. காசில் கட்டினார்களா? தி.மு.க தலைவர் சொந்தப் பணத்தில் கட்டினார்களா?” என்று வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறீர்கள்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் விஜய் பணமா? அல்லது அப்பன் வீட்டுப் பணமா? ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி மாஃபியா பணமா? அரசாங்கக் கஜானாவிலிருந்து அள்ளித் தெளித்துத்தானே மார்பிலே பெருமை சந்தனம் பூசிக் கொள்கிறீர்கள்?
தி.மு.க.விடம் தமிழ்நாட்டை மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைத்தபோது, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களைச் சொன்னால் ஆதவ் அர்ஜூனாக்கள் ஏன் அலற வேண்டும்? பெரியார் அறிவுலகத்தில் இருந்த ‘நான் முதல்வன்’ என்ற வார்த்தைகளைக் கண்டு முதலமைச்சர் விஜய்யும் அவருடனான மற்றும் பலரும் ஏன் பதறினார்கள்? தானே முதலமைச்சராக இருக்கும் நிலையிலும், நான் முதல்வன் என்று சொன்னால் அது மக்கள் மனதில் இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கழகத் தலைவர் திராவிட நாயகரைக் குறிக்கும் என்கிற அச்சத்தினாலா?
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
Also Read
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!
-
தவெக நிர்வாகி வீட்டில் ரெய்டு; 135 KG போதைப்பொருள் பறிமுதல்: சிக்கப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?
-
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!