Tamilnadu

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொலை வழக்கு : கைதிகளை வைத்து தாக்க சொன்ன போலீஸ்... அடுத்தடுத்து அதிர்ச்சி !

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடக்கு தாமரை குளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (35). மாற்றுத்திறனாளியான இவர், தனது வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் மாற்றுத்திறனாளி சபரிவர்மனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் இவர் அடைக்கப்பட்ட நிலையில், லை மாதம் 13-ம் தேதி சிறையில் வைத்தே இவர் உயிழந்தார். மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் உயிரிழப்பு காவல் மரணம் என பலரும் விமர்சித்த நிலையில், இதனை தவெக-வினர் மறுத்து முட்டுக்கொடுத்து மறுத்து வந்தனர்.

இப்படியான நிலையில், மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் உடலில் வலதுகையில் 6 இடங்களில் காயம், வலது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம், இடது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம், இடது நெஞ்சின் கீழ் பகுதியில் 7 cm அளவில் காயம், தலையில் இரண்டு இடங்களில் காயம், மண்டை ஓடு சேதம், பின்னங்கழுத்தில் பலத்த காயம், பின்னந் தலையில் பலத்த காயம் என 19 காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்தே இது காவல் நிலைய மரணம் என வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் என 8 கைதிகள் உட்பட 11 பேரை ஜூலை 14-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

சபரிவர்மனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, அவரது குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடிய நிலையில், அவரைகளை ஒடுக்க முயற்சித்தது காவல்துறை.

ஆளும் தவெக அரசு இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும், சிபிசிஐடி-க்கு இதனை மாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியறுத்திய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

அதன்படி, சிபிசிஐடி டிஎஸ்பி நவராஜ் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள், நாகர்கோவில் சிறைச்சாலை, சபரிவர்மனின் குடும்பத்தினர், கைதான போலீசார் மற்றும் சிறை கைதிகள், மருத்துவமனை என அனைத்து கட்ட அளவிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன், கொலை நடந்த இரவு அன்று சிறையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கச் வேண்டும் என்று அங்கிருந்த கதறியுள்ளார். ஆரம்பத்தில் அவரை மிரட்டிய சிறை வார்டன்கள், பிறகு ஆத்திரமடைந்ததால் அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த கைதிகளை வைத்து சபரிவர்மனை தாக்க உத்தரவிட்டுள்ளனர்.

வார்டன்கள் தூண்டுதலின் பெயரில் கைதிகள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் லுங்கியை வைத்தே அவரது கை, கால்களைக் கட்டி சித்திரவதை செய்துள்ளனர். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சக கைதிகள் மற்றும் காவலர்களின் அலட்சியத்தாலும், கொடூரத் தாக்குதலாலும் தான் சபரிவர்மன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று சிபிசிஐடி போலீசார் பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சுமார் 1200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே முதல் ஜூலை வரை மட்டுமே தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியுள்ளது. இதற்கு ஆளும் தவெக அரசு கள்ள மௌனம் காத்து வருவதோடு, இதனை தடுக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குதிரை பேரத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாக்கு எண்ணிக்கை வீடியோவை காணவில்லை என எப்படி கூற முடிகிறது? : தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் காட்டம்!