Tamilnadu

“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு பரப்பி வரும் அமைச்சர் நில்மர்குமாருக்கு, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:

“தவெக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம்-ஒழுங்கு, இரட்டைப் படுகொலைகள், போதைப்பொருள் கும்பல்களின் அட்டகாசம் என நிலைமை மோசமடைந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என தமிழ்நாடு இருள் சூழ்ந்து கிடக்கிறது.

முதலமைச்சர் விஜய் ரீல்ஸ் எடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகிறார். பாலத்தில் ஏறி நின்று ரீல்ஸ் எடுப்பதும், லண்டன் சென்று ரீல்ஸ் எடுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை மூன்றாவது இடத்தில் வைத்திருந்தோம்.

ஆனால், தமிழ்நாடு இன்று பின்னோக்கி ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் தவெக அரசு செயல்படுத்தவில்லை. பொய்களை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், பொய்யைச் சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெம் வீரமணிக்கும் தி.மு.க-விற்கும் எந்த தொடர்பும் இல்லை!

திமுக மீது இல்லாத வீண்பழியை தவெக அமைச்சர்கள் சுமத்தி வருகிறார்கள். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக 2025 அக்டோபர் 6-ஆம் தேதி தன்னார்வலர் ஒருவர் புகார் கொடுத்தார். அடுத்த நாளே, அக்டோபர் 7-ஆம் தேதி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிவிட்டோம். அவர் கொடுத்த வீடியோ காட்சிகளில் தெளிவு இல்லை; போதிய ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதனால், ‘வழக்கைக் கைவிடவில்லை. உரிய ஆதாரங்கள் திரட்டும் வரை வழக்கின் மீதான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளோம். புதிய ஆதாரம், சாட்சியம் கிடைக்கும் பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது. இதில் எப்படி குற்றவாளியைக் காப்பாற்றினோம் எனச் சொல்ல முடியும்?

வீரமணியை காப்பாற்றும் த.வெ.க அரசு!

திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், புகார் வந்த அடுத்த நாளே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தோம். ஆனால், தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடுத்த புகாருக்கு, செப்டம்பர் 21-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால், இந்த ஆட்சியில் 25 நாட்களுக்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கோமாவில் இந்த ஆட்சி இருந்ததா? அல்லது டீலிங் ஏதாவது நடந்ததா? தவெக அமைச்சர்கள் போக்சோ வழக்கில் உள்ள தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதுவே குற்றவாளிகள் தப்பிக்க உதவியாகவும், அவர்களுக்கு உடந்தையாகவும் இருக்கும்.

போக்சோ வழக்கில் யார் குற்றவாளிகளாக இருந்தாலும், அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. போக்சோ வழக்கில் யாரும் தப்பிக்கக்கூடாது. எனவே, குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் வகையில் தவெக அமைச்சர்கள் தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதுகுறித்து காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான வழக்கில் 25 நாட்களில் என்ன நடந்தது? முதலமைச்சர் இதற்கு பதில் அளிப்பாரா?

50 பெண்கள் பாலியல் வன்கொடுமை: யாரைக் காப்பாற்றுகிறது தவெக அரசு?

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், பெண்களை மிரட்டி பலரும் பெண்களைச் சீரழித்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மணிகண்டனை மட்டும் கைது செய்து விசாரணையை முடித்துள்ளனர். இதில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதை விசாரிக்காமல் தவெக அரசு மூடி மறைக்கிறது. யாரைக் காப்பாற்ற மணிகண்டனை மட்டும் கைது செய்துள்ளீர்கள்?

“நீதிமன்றத்தையே ஏமாற்றிய தவெக அரசு!”

“தவெக ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ளார்கள். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விட்டுவிட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள்.

விசாரணை நடைபெற்ற பிறகும் குற்றப்பத்திரிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து மதுரை உயர்நீதிமன்றத்தில், நாங்கள் இருவரும் சமரசம் செய்துகொண்டதாக மற்றொரு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள்.

இதில் அரசு வழக்கறிஞர்கள் எதையுமே பேசவில்லை. காவல்துறையும் குற்றவாளிகள் குறித்து பேசவில்லை. உடனே இந்த வழக்கு மேல்முறையீடு எனத் தள்ளிப்போகிறது. இதனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும். தவெக அரசு நீதிமன்றத்தை ஏமாற்றியதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து ஏன் யாரும் பேசவில்லை?”எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!