Tamilnadu

த.வெ.கவுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லை : நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் - ஆர்.எஸ்.பாரதி புகார் மனு!

"காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது அங்கீகாரத்தை இழந்துவிட்டனவா அல்லது த.வெ.க.வுடன் இரண்டறக் கலந்துவிட்டனவா என்பதை விளக்க வேண்டும்" தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி”ஒவ்வொரு தேர்தலிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் என்ற அடிப்படையில் அந்தந்தக் கட்சியைச் சார்ந்த 40 பேருக்குப் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும். இந்த நிலுவையில் பிரச்சாரத்திற்காக ஏற்படும் செலவுகளை அந்தந்தக் கட்சிதான் ஏற்றுக்கொள்ளும்; இதுவே சட்டப்பூர்வமான முறையாகும்.

ஆனால், இதுகூடத் தெரியாமல் இன்று ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய த.வெ.க மதியூகமே இல்லாமல் பேசுகின்ற இரண்டு, மூன்று அமைச்சர்களை வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, சட்டத்துறை அமைச்சர் இ.டி.ஆர். நிர்மல்குமார் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போலப் பேசி வருகிறார். சட்டமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் பற்றி உண்மைக்கு மாறாகப் பேசி, தங்களின் ஆறாவது அறிவை அடகு வைத்துவிட்ட சில அமைச்சர்கள் இன்றைக்கு த.வெ.கவில் இருக்கிறார்கள்.

அடிப்படைச் சட்டம் கூடத் தெரியாமல், த.வெ.கவின் நட்சத்திரப் பேச்சாளர்களாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன், வன்னி அரசு மற்றும் வைகோ, துரை வைகோ, காதர் மைதீன் ஆகிய எட்டுப் பேரைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர்.மதிமுக அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ளது; மதிமுகவின் அங்கீகாரம் இல்லாததால் வைகோ, துரை வைகோ ஆகியோரை நட்சத்திரப் பேச்சாளர்களாக இணைக்க முடியாது.

காங்கிரஸ், விசிக ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும். இந்த இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளையும் தன்னுடைய கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாகத் தமிழக வெற்றிக் கழகம் இணைத்திருப்பதன் மூலம், அவர்களுக்கு அடிப்படைச் சட்டம் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.இதன் மூலம் விசிக, காங்கிரஸ் ஆகியவை தங்கள் அங்கீகாரத்தை இழந்துவிட்டனவா அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துவிட்டனவா என்பதை விளக்க வேண்டும். மேலும், அவர்களின் பிரச்சாரச் செலவினங்களை அந்தந்த வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும் எனத் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேட்பாளர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதே இல்லை. இதற்குக் காரணம் என்னவென்றால், த.வெ.கவின் இரண்டு வேட்பாளர்களை மக்கள் வாக்குக் கேட்கவே விட மாட்டார்கள். இதன் காரணமாக அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே, மற்றக் கட்சி வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பை அரசு கொடுத்துள்ளது.திமுகவைப் பொறுத்தவரை, வாக்காளர்கள் எங்களுக்குப் பெருமளவில் பேராதரவையும் நல்ல வரவேற்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு எவ்விதப் போலீஸ் பாதுகாப்பும் தேவையில்லை.

த.வெ.க வேட்பாளர்கள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைய முடியாத காரணத்தினாலேயே, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய நடைமுறையை இந்த அரசு கொண்டுவந்துள்ளது. மக்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கும், வாக்காளர்களை மிரட்டுவதற்கும் மட்டுமே இந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார விவரங்கள் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இரண்டு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதால் வந்ததே இந்த இடைத்தேர்தல் ஆகும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால் : தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!