Tamilnadu

“முதலமைச்சர் விஜய் ஒரு கோயபல்ஸ்” - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!

கரூர் கொடுந்துயரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். மக்களின் துயரத்தைக் கூட அவர் தனது இடைத்தேர்தல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் திருச்சி விமான நிலையத்தில் ஓடு... ஓடு.. என்று ஓடியது யார் என்பதை மறந்திட்டீங்களா? என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கீதா ஜீவன் ”த.வெ.க கட்சிக்கு என்று ஒரு தத்துவம் கிடையாது. பொய்யைப் பரப்புவதுதான் அவர்களின் ஒரே தத்துவம். எங்களின் கழகத் தலைவருக்கு எதிராக ஒரு பொய்யான கருத்தை விஜய் தொடர்ந்து பரப்பி வருகிறார். பொய்யைத் தொடர்ந்து சொல்வதால் அது உண்மையாகிவிடாது.

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் திருச்சி விமான நிலையத்தில் ஓடு... ஓடு.. என்று ஓடியது யார் என்பதை மறந்திட்டீங்களா? ஆனா மக்கள் மறக்கவில்லை. 27 தொகுதிகளுக்கு மேல் விஜய்க்கு மக்கள் கொத்து பரோட்டா போட்டார்களே அது அவருக்கு ஞாபகம் இல்லையா? அடுத்தவர்களைக் குற்றம்சாட்டும் போது ஒரு கை உங்களை நோக்கி இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் மறக்கக்கூடாது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் த.வெ.கவில் இணைந்தவுடன் எப்படி தூய சக்தியாகிவிடுவார்? நீங்க தீர்ந்துபோன சக்தி என்று சொன்ன இடத்தில் இருந்து வந்த எம்.எல்.ஏ எப்படி உங்கள் கட்சியில் சேர்ந்ததும் தூய சக்தியாவார்கள்? இதைத்தான் நாங்கள் த.வெ.க வாஷிங் மெஷின் என்று சொல்கிறோம்.

விஜய்யின் ஒரே நோக்கம் இடைத்தேர்தல்தான். அதனால்தான் பெரம்பூர் மக்களுக்கு இன்னும் நன்றி தெரிவிக்காமல் கரூர், திருச்சிக்குச் சென்று இருக்கிறார். இதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது விஜய் இடைத்தேர்தலை நோக்கிப் பயணிக்கிறார். மக்களைப் பற்றி அவருக்குக் கவலையில்லை."என தெரிவித்துள்ளார்.

Also Read: “அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!