Tamilnadu
அடுத்தடுத்து ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள்... இடைத்தேர்தல் நடத்த தடை விதித்த நீதிமன்றம் - விவரம்!
தவெக தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றார். இந்த சூழலில் திருச்சி கிழக்கில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அது காலியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி பலரும் தவெக-வில் இணைந்தனர்.
குறிப்பாக பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து அண்மையில் அதிமுகவை சேர்ந்த கரூர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தவெக-வில் இணைந்தனர்.
இப்படியான சூழலில் தற்போது தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், விரைவில் அதற்கு இடைத்தேர்தல் நடைபெறும். இதனிடையே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது , மனுதாரர் தரப்பில்...
தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம், 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என வாதிடப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில்...
தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைபாட்டை தெரிவிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்பிறகு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,
தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும் போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் விஜய் தரப்பில்...
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளாராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என வாதிடப்பட்டது.
இப்படியாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது; தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும்முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதோடு அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
’முதலமைச்சர் விஜயின் பேச்சை ஒளிபரப்பி அராஜகம்.. பள்ளி அறிவை வளர்க்க.. அரசியல் புகழ்பாட அல்ல’: DMK IT Wing
-
கரூர் துயரம் : “இன்னும் திருத்தல...” - இறப்பில் இன்றளவும் மலிவு அரசியல் செய்யும் விஜய்!
-
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!