Tamilnadu
சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் புதிதாக 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.3.2026) தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி, அசோக் நகரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை திறந்து வைத்து;
அசோக் நகர் முதல்வர் படைப்பகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக 16.87 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 4.24 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்
10 கோடியே 95 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கம், சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மற்றும் அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
அசோக் நகர் முதல்வர் படைப்பகம்
சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத்தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நூலகத்தின் தரைத்தளத்தில் வரவேற்பறை, குழந்தைகளுக்கான பிரத்தியேக நூலகக் கூடம், நூலகர் அறை, நாளிதழ் வாசிப்பு அறை, காத்திருப்போர் அறை, பிரதான வாசிப்பு மண்டபம், நூல்கள் வைப்பறை, புத்தக அலமாரிகள், நூல் வெளியீட்டு அரங்கம், தேநீர் விநியோகம், மின்சாதன கண்காணிப்பு அறை, மின்தூக்கி வசதிகள், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீனக் கழிப்பறை வசதிகளும், முதல் தளத்தில், முதல்வர் படைப்பகம், கணினி அறை;
கூட்டரங்கம், போட்டித் தேர்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு, அலுவலக அறை, நூல் வாசிப்பு அரங்கம், நூலகம், புத்தக அலமாரிகள், புத்தக வைப்பறை, எறிகருவி படங்காட்டி திறன் அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீனக் கழிப்பறை வசதிகள், திறந்தவெளித் தளத்தில், மேல்மட்ட உயரப்பகுதி, மின்தூக்கி அறை கூரை, 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இப்படைப்பகத்தின் சுற்றுப்புறத்தில், திறந்தவெளி அரங்கம், அவசரகால வெளியேறும் வழி, 16,200 லிட்டர் கொள்ளவு கொண்ட தரைத்தள நீர்தேக்கத் தொட்டி, பசுமைத் தோட்டம், நடைபாதைக் கற்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
காணொலி காட்சி வாயிலாக திறக்கப்பட்ட 10 முதல்வர் படைப்பகங்கள்
அசோக் நகர் முதல்வர் படைப்பகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓட்டோரி, சுப்புராயன் தெருவில் 3.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ஜமாலியா;
மங்களபுரத்தில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தில் 1.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பட்டாளம், பக்தவச்சலம் பூங்காவில் 2.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;
ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி, மேயர் பாசுதேவ் தெருவில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்; எழும்பூர் சட்டமன்ற தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் 82 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்; பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, எருக்கஞ்சேரியில் 1 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் 1.56 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி, ராஜா அண்ணாமலைபுரத்தில் 3.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் என 9 முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகங்கள்;
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, கொண்டித்தோப்பு, அம்மன் கோயில் தெருவில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து 4.24 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்;
என மொத்தம் 16.87 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 4.24 கோடி செலவில் 1 முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகள்
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், ராஜா தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 34.70 இலட்சம் ரூபாய் செலவில் 1,206 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 2,311 குடும்பங்கள் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விளையாட்டரங்கம்
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், லோகோ ஸ்கீம் 1வது தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 2.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த உள்விளையாட்டரங்கம் 22,560 சதுர அடி பரப்பளவில் குத்து சண்டை மேஜை, குத்து சண்டை உபகரணங்கள், வர்ணம் பூசுதல், மின்விளக்குகள், கழிவறை வசதிகள், கூடைப் பந்து மைதானம், பிக்கில் பால் மைதானம், நடைபாதை, செயற்கை தரை, சுற்றுப்புறச் சுவர், திறந்த வெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பசுமைப் படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம்
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், கபிலர் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.64 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளிக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இப்பள்ளிக் கட்டடமானது தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் 5,016 சதுர அடி பரப்பளவில் 17 வகுப்பறைகள், அரங்கம், 15 கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!
-
முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை, புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!