Tamilnadu

ரூ.175 கோடியில் 22 புதிய திட்டப் பணிகள்: எந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகளை தொடங்கி வைத்தார் CM MK Stalin!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 175 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோயில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 215 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் 21 திருக்கோயில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும்10 ஆய்வர் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

16 திருக்கோயில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் :

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கந்தன் இல்லம், கடம்பன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் ஆகிய புதிய தங்கும் விடுதிகள் கட்டுதல் மற்றும் திருக்கோயில் வடக்கு கிரிவீதியில் வரிசை மண்டபம் கட்டும் பணிகள்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலின் கடற்கரை பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு மூழ்கிய கடல்சார் அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 29.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போதுள்ள மலைப்பாதையை ஒட்டி புதிய மலைப்பாதை அமைக்கும் பணி;

திருச்சி மாவட்டம். சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 15.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நாள்தோறும் 10 இலட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரும் பணி; தென்காசி மாவட்டம், குற்றாலம், அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் 9.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், தலையநல்லூர், அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயிலில் 7.05 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் மற்றும் புதிய நிறுத்த மண்டபம் கட்டும பணிகள்; கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகாமண்டபம், வசந்த மண்டபம் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் சன்னதி கட்டும் பணி;

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் தெற்கு பகுதியில் உள்ள மொட்டை கோபுரத்தினை ஐந்து நிலை இராஜகோபுரமாக உயர்த்தி கட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு ஒளிரூட்டும் பணி; தேனி மாவட்டம், தெப்பம்பட்டி அருள்மிகு அகோபிலராயப் பெருமாள் திருக்கோயிலில்

2.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் புனரமைக்கும் பணிகள்;

மதுரை மாவட்டம், செல்லூர், அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலில் 1.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிஷப தீர்த்த குளத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி; சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 1.06 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சுற்றின் உட்பகுதியில் மங்களூர் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணி;

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைக்கும் திட்டத்தின்கீழ், 11.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம், அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர், அருள்மிகு மூன்றீஸ்வரமுடையார் திருக்கோயில் மற்றும் வீரவநல்லூர், அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களை புனரமைக்கும் திருப்பணிகள்;

என மொத்தம் 175.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

21 திருக்கோயில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் :

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 68.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் குடில்கள் மற்றும் வளாகங்கள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர், சஷ்டி மண்டபங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடங்கள், சுகாதார வளாகங்கள், திருக்கோயில் நுழைவாயில் மற்றும் பசு மடம்; திருள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 39.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலக வளாகம், பக்தர்கள் தங்கும் அறைகள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, முடிகாணிக்கை மண்டபம், சுகாதார வளாகம், விரிவாக்கப்பட்ட அன்னதானக் கூடம், பொங்கல் மண்டபம்; மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி;

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் 22.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வரிசை மண்டபம்; விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 17.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், திருக்கோயில் உட்பிரகார மற்றும் வெளிபிரகார மண்டபங்களின் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைபாடுகள், மூன்று நுழைவு தோரணவாயில்கள் மற்றும் கலையரங்கம்; சேலம் மாவட்டம், மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 4.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம் மற்றும் செயல் அலுவலர் குடியிருப்பு;

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 4.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சஷ்டி மண்டபம்; 2.92 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், அருள்மிகு பொதுபஜனை மடத்தில் புனரமைக்கப்பட்ட பஜனை மடம் மற்றும் சென்னை, எழும்பூர். அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், கோவை மாவட்டம், சூலக்கல், அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், கடலூர் மாவட்டம், பெருமுளை, அருள்மிகு முத்தையாசாமி திருக்கோயில் மற்றும் வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்கள்;

3.32 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உபகோயில்களான அருள்மிகு ஆதிஅருணாசலேசுவரர் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், திருக்குள சுற்றுச்சுவர் மற்றும் அருள்மிகு குபேரலிங்கம் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் திருக்குள சுற்றுச்சுவர்; 3 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் கட்டப்பட்டுள்ள மண்டல இணை ஆணையர் அலுவலக கட்டடம்; கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு தில்லையம்மன் திருக்கோயிலில் 2.75 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்;

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, அருள்மிகு காலபைரவர்சுவாமி திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் செலவில் திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் இரவு நேரங்களில் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டுதல்; திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பம், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.73 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்; கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம்;

கடலூர் மாவட்டம், திட்டக்குடி, அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் 1.28 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்; 1.20 கோடி ரூபாய் செலவில் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம், திருப்பத்தூர், தேவகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், திருநெல்வேலி மேற்கு, இராதாபுரம், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகிய 10 இடங்களில் கட்டப்பட்டுள்ள சரக ஆய்வாளர் அலுவலகங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம்,

தெற்குபொய்கைநல்லூர், அருள்மிகு சொர்ணபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 1.11 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட காய்கறி சந்தை; இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் ஓய்வுக்கூடம் கைப்பேசி மற்றும் பொருட்கள் வைப்பறை மற்றும் பக்தர்களுக்கான சிற்றுந்து சேவை;

என மொத்தம் 215.79 கோடி ரூபாய் செலவிலான 65 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

Also Read: திருவான்மியூர் TO உத்தண்டி - 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ.2100 கோடியில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டிய CM!