Tamilnadu

“சென்னைக்கான வளர்ச்சிப் பணிகளை பார்த்துப் பார்த்து செய்து வருகிறோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (29.1.2026) சென்னை, பெரம்பூர் நெடுஞ்சாலை, திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, ஆற்றிய உரை:-

சென்னையின் கட்டமைப்பு வசதியைப் பெருக்கிட வேண்டும்; அதை நல்ல வகையில் உருவாக்கிட வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருப்பதில் நம்முடைய திராவிட மாடல் அரசு எந்த அளவிற்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை – இந்த சென்னையில் ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு உரிய வசதியை, நல்ல சுகாதாரத்தை, அந்த வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக எத்தனையோ திட்டங்களை பல கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு நம்முடைய அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் நேரங்களில் எல்லாம் ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் கொண்டு வந்திருக்கிறோம்.

இன்றைக்கு சென்னையில் இருக்கக்கூடிய மேம்பாலங்களைப் பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும். சுரங்கப்பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும் சரி, மெட்ரோ ரயில் வசதி என்று எல்லாவற்றையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான் கொண்டு வந்திருக்கிறோம். இந்த வளர்ச்சிப் பணியில், ஏதாவது விடுபட்டுவிடக் கூடாது என்று, கவனமாக பார்த்துப் பார்த்து அந்த உட்கட்டமைப்பு வசதிகளை எல்லாம் இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்து, இந்த ஐந்து வருடங்களில், சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நான் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன்; முழுமையாக சொல்ல நேரமில்லை. இதே வடசென்னை பகுதியில், மேயர் சிட்டிபாபு பாலம், தென் சென்னை பகுதியில், தியாகராய நகர் ஆகாய நடைமேம்பாலம், ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னை பகுதியில், செங்கை சிவம் பாலம் என்று 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பாலங்களை அமைத்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னும் 19 பாலங்கள் இந்த சென்னை மாநகருக்கு உருவாக்கித் தருவதற்கு அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சாலை பணிகள் என்று எடுத்துகொண்டால், 2 ஆயிரத்து 359 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 ஆயிரத்து 455 கிலோமீட்டர் நீளத்திற்கு, 19 ஆயிரத்து 849 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை அமைத்திருக்கிறோம். இன்னும் 196 கிலோமீட்டருக்கான 1,315 சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம், சென்னையில் மழை பெய்தால், என்ன நிலைமை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போது அது எந்த அளவிற்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 2015-ல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம் – உங்களுக்கு தெரியும். அதனால், மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார்கள் என்பது இந்த சென்னை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு இயற்கையாகவே, சாதாரண மழையல்ல; எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அதை சமாளிக்கக்கூடிய ஆற்றல் இன்றைக்கு நம்முடைய சென்னை மாநகரத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால், அதை நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றிருக்கக்கூடிய திட்டங்கள் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

6 ஆயிரத்து 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 422 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணிகள் எடுத்துக்கொண்டு, அதில் 4 ஆயிரத்து 309 கோடி ரூபாய்க்கு 1076 கிலோமீட்டர் நீளத்திற்குப் பணிகளை முடித்திருக்கிறோம்.

இதுமட்டுமல்ல, நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் என்று நிறைய செய்துகொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில் தான், இன்றைக்கு இந்த திரு.வி.க. நகர் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை”, இதனால், இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மட்டுமல்ல; சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய தொகுதிகளுக்கும், பகுதிகளுக்கும் நிச்சயமாக இந்த மண்டபம் பயனளிக்கும்.

இந்தப் பணியை சிறப்பாக அமையவேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக அயராது உழைத்து, பாடுபட்டு, பணியாற்றி அதில் வெற்றியை நிலைநாட்டி இருக்கக்கூடிய நம்முடைய சேகர்பாபு அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கே மேயர் குறிப்பிட்டுச் சொன்னார், அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கூட, அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைகழத்திற்கு அவருடைய பெயரை வைக்க யோசித்துக் கொண்டிருந்தபோது, போராடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயரை சூட்டியது தலைவர் கலைஞர் தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அவர் காட்டிய வழியில்தான், இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இன்றைக்கு ‘சமத்துவ நாளாக’ நம்முடைய அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, “அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை” - “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்திகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் தான் இந்த மாளிகையும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் திருமண மண்டபம் தான் என்று சொல்வார்கள். ஆனால், இது திருமண மண்டபம் அல்ல; இது திருமண மாளிகை – மாளிகை போல அமைத்திருக்கிறோம். இவற்றை நீங்கள் எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த திருமண மண்டபத்தில், 10 ஜோடிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை காணக்கூடிய மணமக்களுக்கு, நான் எந்த அறிவுரையும் சொல்ல தேவையில்லை. இப்போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை; யாரையும் கொச்சைப்படுத்திப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் வைப்பதெல்லாம் பார்க்கிறோம்; இதை சொல்லும் போது, என்னுடைய பெயரும் ஸ்டாலின் – அது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் என்னுடைய பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு – அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ரஷ்யாவில் புரட்சியாளர் ஸ்டாலின் நினைவில் கொண்டு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில், அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அந்த பெயரை எனக்கு சூட்டி, தலைவர் கலைஞர் மகிழ்ந்தாரே தவிர, வேறு எதுவும் கிடையாது.

அதனால் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் – மணமக்களுக்கு மட்டுமல்ல; இனி வரக்கூடிய காலக்கட்டத்தில், பேரன், பேத்திகளை எல்லாம் நீங்கள் எடுக்கப் போகிறீர்கள் – அந்தக் குழந்தைகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; சூட்டுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று, பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க! புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லிய, “வீட்டிற்கு விளக்காக - நாட்டிற்குத் தொண்டர்களாக” வாழுங்கள்! வாழுங்கள்! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Also Read: ஜவுளித் தொழில் மாநாடு: ஜவுளி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!