Tamilnadu

“வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியமின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் “வீட்டுக்கொரு சோலார்“ திட்டபரப்புரை துவக்கம் மற்றும்“ புதிய மேற்கூரை சோலார் வழிகாட்டி மென்பொருள் கருவி – (Rooftop solar Explorer) RTSE – பயன்பாடு ஆகியவற்றை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 50சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறும் தெளிவான கொள்கை மற்றும் தொலை நோக்கு இலக்கை கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்த கார்பன் உமிழ்வை 70 சதவீதம் வரை குறைக்க இயலும்.

தமிழ்நாட்டில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சூரிய மின்னாற்றலின் உச்ச மின் உற்பத்தி 06.08.2025 அன்று அதிகபட்சமாக 6,731மெகாவாட்டாக பதிவாகியது.

வீடுகளின் மேற்கூரை சோலார் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் டிசம்பர் 2025 வரை 1302.06மெகாவாட் நிறுவப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது வீட்டுக்கொரு சோலார் என்னும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்து பரப்புரை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, வீட்டுமாடி சோலார் அமைக்க விரும்பும் மின்நுகர்வோர், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் (TNPDCL) இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, களஆய்வு செய்து சாத்தியக்கூறு அனுமதிவழங்கப்படுகிறது.

குறிப்பாக,வீட்டுமாடி (Rooftop) சோலார் மின் திட்டங்களை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்த மற்றுமொரு முன்னெடுப்பாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சார்பில் “மேற்கூரை சோலார் வழிகாட்டி மென்பொருள் கருவி“ (“Rooftop Solar Explorer”) RTSE என்ற புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கூரை சோலார் மின்உற்பத்தி மூலம் 11.64 ஜிகாவாட் உற்பத்தி செய்ய சாத்தியமிருந்தும் 60 மெகாவாட் மின் அளவிற்கே மேற்கூரை சோலார் உற்பத்திக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. 

இந்த மென்பொருள் கருவி, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களின் GIS அடிப்படையில் ட்ரோன் படங்கள் மற்றும் மின்நுகர்வோர் விவரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், மின்நுகர்வோர் தங்களின் மின்இணைப்பு எண்ணை பதிவிட்டவுடன், தங்களது வீட்டின் மாடியில் எவ்வளவு சோலார் மின்திறன் நிறுவலாம், சூரிய ஒளியின் அளவு போன்ற சாத்தியக் கூறுகள் மற்றும் செலவினங்கள் போன்ற விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் நாம் இதுவரை செலுத்தி வந்த மின்கட்டணம் சூரிய மின்னாற்றல் பயன்பாட்டிற்கு பிறகு எவ்வளவு மின்கட்டணம் குறையும், சோலார் மின் கட்டமைப்பிற்கான செலவு எவ்வளவு காலத்தில் திரும்ப கிடைக்கும் என கணக்கிடும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால், நுகர்வோர்கள் எளிதில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். சோலார் மின்உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு நிகரஅளவீடு (Net Metering) வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருள் கருவியின் வாயிலாக, பொதுமக்கள் ஒரே கிளிக்கில் சோலார் மின்திறனை அறிவதன் மூலம் சோலார் நிறுவும் பணியினை திட்டங்களை உடனடியாகத் தொடங்க முடியும். மின்வாரியத்திற்கும் ஆய்வு இல்லாமல் சாத்தியக்கூறு அறிக்கை வழங்க இயலும். இதனால், மேற்கூரை சோலார் திட்டங்கள் விரைவாக அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இலக்கினை அடையலாம். 

இந்த புதிய முயற்சி, பொதுமக்களுக்கு சுத்தமான, மலிவான மின்சாரத்தை எளிதாக கிடைக்கச் செய்வதுடன், மின்கட்டணமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து தமிழ்நாட்டின் பசுமை ஆற்றல் இலக்கை அடைய பெரிதும் உதவும். மேலும், மின்தொடரமைப்பு மற்றும் விநியோகத்தின் போது ஏற்படும் மின்இழப்பு குறைகிறது. 

Also Read: “அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!