Tamilnadu

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 155 புதிய வாகனங்கள்! : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC BS-VI) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது.  எனவே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்களுக்கு வாகனங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. 

2025-2026-ஆம் ஆண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள் ஆக மொத்தம் 155 புதிய வாகனங்கள் ரூ.16.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.   

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள், என மொத்தம் 13 கோடியே 73 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC PS BS-VI) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் மேற்கண்ட உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. 

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 36 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 370 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read: தஞ்சை - “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மகளிரணி மாநாடு தேதியில் மாற்றம்! : முழு விவரம் உள்ளே!