Tamilnadu
750 SI & தீயணைப்புத் துறை அலுவலர்கள் பணி நியமனம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.1.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என மொத்தம் 750 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
காவல்துறை
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் (ஆண்-469 மற்றும் பெண்-152) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் கட்டித் தருதல், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருதல், பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள் (ஆண்-90 மற்றும் பெண்-39) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் அவர்கள் பணிநியமன ஆணைகள் வழங்கிய 20 நபர்கள் போக, மீதமுள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் வரும் 5.01.2026 முதல் தொடங்கப்பட உள்ளன. அதேபோன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 21.01.2026 அன்று தொடங்கப்பட உள்ளன.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 444 (ஆண் – 311 மற்றும் பெண் – 133) நபர்களும், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு 16,199 (ஆண் – 11,666 மற்றும் பெண் – 4,533) நபர்களும், தீயணைப்பாளர்கள் (Fireman) பணியிடங்களுக்கு 2001 நபர்களும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கு 366 நபர்களும், என மொத்தம் 19,010 நபர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டு, சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!