Tamilnadu

“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!

தமிழ்நாட்டின் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை குறித்து சல்மான் அனிஸ் சோஸ் எழுதிய சிறப்புக் கட்டுரையை தி இந்து நாளேடு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் சமீபத்திய பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அது அப்பட்டமான அவசரகதியில் எழுதப்பட்ட பதிவு என்றும் அக்கட்டுரை விமர்சித்துள்ளது.

2010 இல், உத்தரப் பிரதேசத்தின் கடன், தமிழ்நாட்டின் கடனை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததாகவும், இன்று, தமிழ்நாட்டின் கடன் உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளதாக மேலோட்டமாக குறிப்பிடுவது அபத்தமானது என்றும், பொது நிதிநிலை அரிதாகவே நேர்த்தியாக இருக்கும், ஒரே ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட கதைகள், அவை வெளிப்படுத்துவதை விட மறைக்கப்படுவது அதிகமாகவே இருக்கும் என்றும் இக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எதிர்கால பட்ஜெட்டுகள், மற்றும் கொள்கை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டதே கடன் என்றும், கடன் பெறுவது தார்மீக தோல்வியோ, ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் ஒற்றை அடையாளமும் அல்ல என்றும் இக்கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார விவரங்களை புரிந்து கொள்ள கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும், 2025-26 நிலவரப்படி, தமிழ்நாட்டின் கடன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.1 சதவீதமாக உள்ளதையும், 2024-25 இல் இது 26.4 சதவீதமாகவும், 2023-24-ல் 26.6 சதவீதமாகவும் இருந்ததையும் கட்டுரை சுட்டிக்காட்டி உள்ளது.

மாநிலத்தின் கடன் விகிதம் அதன் கொரோனா உச்சத்திலிருந்து படிப்படியாகக் குறைந்து வருகிறது, ஆனால், இதற்கு நேர்மாறாக, உத்தரப் பிரதேசம் 2025-26 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 29.4 சதவீதம் அளவுக்கு கடன்களுடன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2024-25 ஆம் ஆண்டில் இருந்த 30.8 சதவீதத்தில் இருந்து குறைவு என்றாலும், அதன் பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடுகையில், உத்தரப் பிரதேசம் தமிழ்நாட்டை விட அதிக கடன் சுமையுடன் உள்ளதையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025-26-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம். 35.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் 30.8 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை விட இது கணிசமாக அதிகம் என்றும் தி இந்து கட்டுரை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தனது வருவாயில் அதிக பங்கை வட்டிக்காக செலவிடுகிறது என்ற விமர்சனமும் அர்த்தமற்றது, 2025-26ல் சுமார் 21 சதவீதம் அதிக வட்டிச் சுமை உள்ள மாநிலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2025-26ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்கும்.

இது 2024-25 ஆம் ஆண்டிற்கான 3.3 சதவீதம் என்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டை விடக் குறைவு என்றும் முழுமையாக நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை கட்டமைப்பிற்குள் உள்ளதாகவும், மேலோட்டமான மொத்தக் கடன் புள்ளிவிவரங்களிலிருந்து விலகி, கடன் மேலாண்மை எவ்வாறு இருந்து வந்துள்ளதை மதிப்பிட வேண்டும் எனவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தொற்று அதிர்ச்சியை உள்ளடக்கிய சமீபத்திய ஐந்து ஆண்டு காலகட்டத்தில் கூட, வளர்ச்சிக்கும் வட்டிக்கும் இடையிலான வேறுபாடு 1.3 சதவீதப் புள்ளிகளாக நேர்மறையாகவே உள்ளதையும், வளர்ச்சி விகிதம் கடன் வாங்குவதற்கான பயனுள்ள செலவை விடத் தொடர்ச்சியாக அதிகமாக இருக்கும்போது, ​​முதன்மைப் பற்றாக்குறைகள் மிக அதிகமாக இல்லாத பட்சத்தில், கடன் விகிதங்கள் நிலைபெறுகின்றன அல்லது குறைகின்றன.

தமிழ்நாட்டின் விஷயத்தில், இந்த முதன்மைப் பற்றாக்குறைகள் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளதாகவும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டி உள்ளார். 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தனிநபர் பங்கு 3.53 லட்சம் ரூபாயாக இருந்தது, இது உத்தரப் பிரதேசத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாகும் என்றும், இது நீடித்த உயர் உற்பத்தித்திறன், தொழில்மயமாக்கல் மற்றும் மனித மூலதன உருவாக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்றும் தி இந்து கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு மிகவும் தொலைநோக்குடையதாக உள்ளதாகவும், 2025-26 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மூலதனச் செலவினங்களில் 22 சதவீதம் அதிகரிப்பைத் திட்டமிட்டதாகவும், குறிப்பாக போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு மற்றும் எரிசக்தித் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இக்கட்டுரை பாராட்டி உள்ளது.

தமிழ்நாடு மொத்த வரவுகளில் 75 சதவீதத்தை தனது சொந்த வளங்களில் இருந்து திரட்டுகிறது. 25 சதவீதம் ஒன்றிய வரிகளில் அதன் பங்கு மற்றும் மானியங்கள் மூலம் பெறுகிறது, ஆனால், இதற்கு மாறாக, உத்தரப் பிரதேசம் தனது வருவாயில் பாதிக்கும் அதிகமாக ஒன்றிய அரசைச் சார்ந்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள

திஇந்து கட்டுரை, இது தமிழ்நாட்டின் வரிகளுக்கான வலுவான அடித்தளங்கள், மற்றும் நேர்த்தியான பொருளாதார நடவடிக்கைகளின் பிரதிபலிப்பு என்றும் பாராட்டி உள்ளது.

Also Read: தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!