Tamilnadu
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் உரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஈரோடு உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை’ வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.
முதலில் இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய Advance புத்தாண்டு வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த ஈரோடு மண்ணிற்கு எப்போது வந்தாலும், ஒரு தனி உணர்ச்சி, ஒரு தனி மகிழ்ச்சி, ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு முழு காரணம் இது தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மண் என்பதால்தான்.
எப்படி, இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் Athletes, Sportsman நீங்கள் எடுக்கின்ற ஒரு பயிற்சி, போட்டியில் உங்களை வெற்றி பெற வைக்க துணை நிற்கின்றதோ, அதே மாதிரி பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் இந்த ஈரோட்டு மண்ணில் தான் பெரியார் அவர்களிடம் பயிற்சி எடுத்தார்கள். இப்படி அவர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுத்த மண், இந்த ஈரோடு மாவட்டம். அவர்களிடம் எடுத்த பயிற்சிதான் இன்றைக்கும் தமிழ்நாட்டை
வெற்றிபெற வைத்திருக்கிறது. தொடர்ந்து வெற்றி பெற வைக்கும்.
அந்த பயிற்சியை, பாடமாகக் கொண்டு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், செயல்படுவதால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே, நம்முடைய தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான ஒரு மாநிலமாக, இந்தியாவிலயே ஒரு முன்னேறிய மாநிலமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பல்வேறு துறைகளில் தமிழ்நாடு எப்படி,
நம்பர் 1 மாநிலமாக பெருமையோடு இருக்கிறதோ, அதிலும் குறிப்பாக நாம் எல்லோரும் பெருமைப்படும் அளவிற்கு விளையாட்டுத் துறையில் இன்றைக்கு இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக, நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.
அதற்கு நம்முடைய அரசின் முயற்சி மட்டுமே காரணமல்ல,
இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், அவர்களுடைய பயிற்சியாளர்கள் இவர்கள் அத்தனைபேருமே இதற்கு காரணம். நம்முடைய அரசினுடைய முயற்சி, அதே போல விளையாட்டு வீரர்களுடைய பயிற்சி இதெல்லாம்தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான வீரர்களையும், வீராங்கனைகளையும் நாம் உருவாக்கி கொண்டு இருக்கின்றோம். அதற்கு இங்கு இருக்கக்கூடிய இந்த மேடை, இந்த அரங்கம் ஒரு சாட்சி.
இந்த ஈரோடு மண்ணைச் சேர்ந்த, விளையாட்டு வீரர்களில் பல சாதனைகள படைத்திருக்கக்கூடிய 2 வீரர்கள் இங்கே மேடையில் உங்கள் முன்பு உட்காந்து இருக்கிறார்கள். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தங்கை சினேகா இங்கே வந்து இருக்கிறார்கள். எவ்வளவு அழகாக தன்னம்பிக்கையுடன் பேசினார்கள் என்பதற்கு, அவர்களுடைய பயிற்சிக்கும், விளையாட்டுத்துறையின் மூலமாக அந்த Exposure மிக, மிக முக்கியம்.
இன்றைக்கு பேசும்போது நான் அவர்களுடைய ஊருக்கு கரட்டுப்பாளையத்திற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக நான் அடுத்த முறை வரும்போது, தங்கை சினேகா வீட்டிற்கு நான் சும்மா வரமாட்டேன். சாப்பிடுவதற்கு வருவேன். அடுத்த முறை சாப்பிடுவதற்கு கூப்பிட வேண்டும்.
ஈரோடு பெரிய கரட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு,
இன்றைக்கு இந்தியாவினுடைய முக்கியமான Gymnastics வீராங்கனைகளில் முக்கியமான ஆளாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தங்கை சினேகா அவர்கள். அவர்களுக்கும், அவருடைய சகோதரருக்கும், தொலைக்காட்சி வழியாக பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அவர்கள் பெற்றோர்களுக்கும் நாம் அத்தனைபேரும் கைத்தட்டல் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். இன்னொரு கூடுதல் பெருமை, SDAT மாணவி என்பது எங்களுடைய துறைக்கு கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் பெருமை. இன்னும் பல சாதனைகளை அவர்கள் சாதிப்பார்.
அதே மாதிரி, தங்கை நித்யா ராம்ராஜ் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். இவரும் நம்முடைய துறையினுடைய SDAT Hostel மாணவி என்பதில் எங்களுக்கு கூடுதல் பெருமை. இன்றைக்கு சர்வதேச அளவில் தடகளத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள் சகோதரி நித்யா ராம்ராஜ் அவர்கள்.
மற்ற வீரர்களுக்கு, குறிப்பாக, பெண்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்கு இந்த இரண்டு பேரும் இங்கு இருக்கக்கூடிய அத்தனைபேருக்கும் Role Model-ஆக செயல்பட்டு இருக்கிறார்கள். சாதனை படைத்திருக்கிறார்கள். தங்கைகள் இருவருக்கும் நாம் அத்தனை பேரும் கைத்தட்டல்கள் மூலமாக வாழ்த்துகளை தெரிவிப்போம்.
இன்றைக்கு விளையாட்டு வீரர்களை அழைத்து கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கொடுக்கின்றோம். அதற்கு இவர்கள் இரண்டு பேரையும் அழைத்து கவுரவப்படுத்தி, அவர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறோம் என்றால், அவர்கள் உங்கள் அத்தனைபேருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு காரணம். அதுமட்டுமல்ல உங்களிலிருந்து இனி நிறைய நித்யா ராமராஜகளும், சினேகாக்களும் விளையாட்டு வீரர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக தான் இன்றைக்கு அவர்களை அழைத்து உங்கள் முன்பு சிறப்பிக்கின்றோம்.
அதற்காகத் தான் இன்றைக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை தொடங்கினோம். அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். சென்ற வருடம் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்தோம், கிட்டத்தட்ட 13 ஆயிரம் ஊராட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்த்தோம்.
இந்த ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தால் கிராமங்களில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கிடைத்தது. அதனால் தான், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று இந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.
அதன் அடிப்படையில் தான், கடந்த மாதம் நகர்புறங்களில் இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த கிட்ஸ கொடுக்க ஆரம்பித்தோம். அந்த வகையில், இன்றைக்கு 14 மாவட்டங்களுக்கு சுமார் 6 ஆயிரம் Kalaignar sports kits இன்றைக்கு இந்த நிகழ்ச்சி மூலாக சென்று சேர இருக்கிறது.
எல்லாரும் கிரவுண்டுக்கு வர வேண்டும். எல்லாரும் விளையாட வேண்டும். படிப்பு முக்கியம். படிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சி முக்கியம். விளையாட்டு முக்கியம். அப்போது தான், உடலும், உள்ளமும் உறுதியாக இருக்கும்.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் இன்றைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு காலையில் கூட கோயம்புத்தூர் மாநகரில்
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை திறந்து வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கின்றேன்.
ஒரு மாதத்திற்கு முன்பு உலக கோப்பை ஜீனியர் ஹாக்கி போட்டி முதல் முறையாக இந்தியாவில், தமிழ்நாட்டில் நடந்தது. சென்னையிலும், மதுரையிலும் நடத்தி காட்டினோம். இனிமேல் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகள், இனிமேல் உங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கோவையிலும் அடிக்கடி நடக்கும்.
அதுமட்டுமல்ல, நம்முடைய அரசு பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து ஏராளமான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நான்கரை வருடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த வருடம் மட்டும், ஒரு முறை Squash World Cup போட்டியை நடத்தினோம். இரண்டு வருடத்திற்கு முன்பு Squash World Cup போட்டியை நடத்தினோம்.
இந்த முறை இந்தியா வென்று தங்கப்பதக்கம் வென்றது. World Surfing League நடத்தினோம், Asian Cup Hockey Championship நடத்தினோம், Chennai Chess Grand Masters நடத்தி காட்டினோம், முதன்முறையாக Formula 4 Chennai Night Street Circuit நடத்தி காட்டினோம். இப்போது சமீபத்தில், Men’s Junior Hockey World Cup-ஐ சென்னையிலும், மதுரையிலும் நடத்தி காட்டினோம்.
சென்னையில் மட்டும் இல்லாமல், இந்த முறை, முதல்முறையாக, மதுரையிலயும், இந்த சர்வதேச ஹாக்கிப் போட்டியை நடத்தி காட்டினோம்.
இதற்காக மதுரையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியத்தை 6 மாதத்தில் 20 கோடி ரூபாய் செலவில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி காட்டினோம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் மூலம்,
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே வீரர்களுக்கு பயிற்சி, விமான சீட்டு, அவர்களுக்கு சாப்பாடு இதற்கெல்லாம் உதவுவதற்காக தொடங்கப்பட்டதுதான் நம்முடைய சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன். அதன் மூலமாகவும் வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி கொடுக்கின்றோம்.
போட்டியில் மெடல் அடித்து வந்தால், அரசு சார்பில் உடனடியாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உயரிய ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 3 சதவீத sports quotaவில் உடனடியாக அரசு வேலை வாய்ப்பையும் அவர்களுக்கு கொடுக்கின்றோம்.
இதுவரைக்கும் எந்த அரசிலும் இல்லாத அளவிற்கு முதன்முறையாக சென்ற வருடம் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறையில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். இந்த முறை 125 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு இலக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி, உங்களில் பல பேர் கலந்திருப்பீர்கள், அதைபற்றி கேள்விபட்டிருப்பீர்கள். முதலமைச்சர் விளையாட்டு கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தி காட்டுகிறோம். இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பரிசுத் தொகை மட்டுமே ஒவ்வொரு வருடமும் 30 கோடி ரூபாய் அளவிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி கொடுத்திருக்கின்றார்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை, விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று, நாம் மட்டும் இல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும், இன்னும் பல மாநிலங்களும் நம்மை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விளையாட்டுத்துறையில் நம்முடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, Hindu SportStar Magazine, CII, FICCI இது போன்ற அமைப்புகள், Best State for promoting sports என்ற விருதை தொடர்ந்து நம்முடைய தமிழ்நாடு அரசிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வெற்றி பயணம் தொடர வேண்டும். தமிழ்நாட்டு வீரர்கள் சாதிக்க நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றென்றும் விளையாட்டு வீரர்களுக்கு துணையாக நிற்பார்கள். ஆகவே, விளையாட்டில் உங்கள் முழு கவனத்தை நீங்கள் செலுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் அந்த விளையாட்டில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். ஆடுகளத்தில் உங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பயன்படுத்துங்கள். இந்த ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பத்திரமாக நீங்கள் பராமரியுங்கள்.
குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள்,
பேரூராட்சி செயல் அலுவலர்கள், இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை முறையாக பயன்படுத்துவதை நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பெற்றுக்கொண்ட அத்தனை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
Also Read
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!
-
”பிறக்கின்ற புத்தாண்டு 2026 - அது திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!