Tamilnadu

கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!

ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.

அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து, கோவை மாவட்ட மக்களும், கோவை மாவட்டத்தின் மக்கள் நிகராளிகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!