Tamilnadu
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
பணபலத்தாலும், தந்திரங்களாலும் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பிஜேபி அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதச் சார்பின்மையையும், சோஷலிச கோட்பாட்டையும் நசுக்கி வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவன்று நேரில் சென்று கிறித்துவர்களுக்கு வாழ்த்து சொல்லுகிறார் பிரதமர் மோடி! அதே நேரத்தில் பிரதமர் மோடியின் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் கிறித்துவர்களைத் தாக்குகின்றனர்!! வரும் 2026 தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலில் இந்த மதவாத சக்திக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்; இல்லையெனில் மிஞ்சுவது காலித்தனம்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:-
இரட்டை நாக்கு – இரட்டை வேடம்– இவைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் ஆரியம் என்ற ‘‘விதைக்காது விளையும்’’ கழினியான ஆரியம்! அந்த ஆரியத்தின் இன்றைய முழு வடிவமும், தன்மையும் கொண்டவைதான் அதன் தத்துவ வடிவமான ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. என்ற பழைய ‘ஜனசங்கம்’ ஆன தேர்தல் கட்சியும் ஆகும்.
ரூ.6,654 கோடிக்கு மேல் தேர்தல் நிதி வசூல் பெற்று ஆட்சியைப் பிடித்த பிஜேபி
என்ன தான் ஓங்கி வளர்ந்தஅரசியல் கட்சி தோற்றமளித்தாலும், தேர்தலில் ரூ.6,654 கோடிக்கு மேல் தேர்தல் நிதியாகப் பெற்று, இன்று ‘மைனாரிட்டி, அரசாக’வே ஒன்றியத்தில் ஆட்சி புரிந்தாலும் மக்கள் ஆதரவை, நம்பிக்கையை இழந்து வரும் நிலைதான்! ஆளும் அரசியல் கட்சி என்றாலும் சில உத்திகள்,பல தந்திரங்கள், ‘வாக்குத் திருட்டு’ போன்ற பல குற்றச்சாற்றுகளை மக்கள் மன்றத்தில் பெற்றாலும் அதனைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், பதவிப் பிரமாணம் எடுத்தாலும், அந்த அரசியலமைப்புச் சட்டத்தை நாளும் துடைத்தெறியும் செயற்பாடுகளை நடத்தி வருகிறது. ‘உள்ளொன்றும், புறமொன்றும்’ வைத்துள்ள ‘நடிப்புச் சுதேசிகளாக’ வாழ்ந்து ஜனநாயகத்தின் வேரில் நாளும் வெந்நீர் ஊற்றுகின்றனர்!
அனைவரது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை. ஆனால் அதனை அறவே மீறி, தானடித்த மூப்பாக ஒரு யதேச் சாதிகாரத்தனத்தை நாளும் நிறுவி மகிழ்ச்சி அடைவதோடு மமதை கொண்டு ‘இராஜ்யபாரம்’ நடத்துகிறது!
‘மதச் சார்பற்ற சமதர்ம’ (secular Socialist) என்ற அடிப்படைக் கொள்கையை எதிர்த்து, சில நாள்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ‘அரசியலமைப்புச் சட்டத்தின்துவக்கத்தில் அச் சொற்கள் இல்லையே, பிறகுதானே திருத்தமாக அச்சொற்கள் அதில் இடம் பெற்றன. அதனால் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்ற பொருளில் பேசுகிறார்.
இதுபற்றி அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டம் முழு வடிவம் பெறு முன்னரே, அச்சொற்கள் அப்போதே இடம் பெற சில முக்கிய அறிஞர் பெரு மக்கள் வலியுறுத்திய போது, அதன் வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறியது என்ன? படித்துப் பார்க்கட்டும்!
இந்த அரசியல் கூட்டத்தின் முழு உணர்வும் (Spirt) அரசியல் சட்டத் தத்துவம் செக்குலர் – மதச்சார்பின்மையை முழு மூச்சாகக் கொண்டுள்ளதால், அதனைத் தனியாக இந்த இரண்டுசொற்களை சேர்த்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை; பிறகு தேவையானால் அதனை இணைத்துக் கொள்ளலாம் என்ற கருத்துடைய பதிலை விளக்கமாகத் தந்துள்ளார்.
‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாகவே இச்சொற்கள் பிறகு இணைக்கப்பட்டன’’ என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூற்றுப்படி வாதமாக அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, அதற்குக் கட்டுப்பட்டுதானே அனைவரும் நடக்க வேண்டும்! இதனை ஆர்.எஸ்.எஸ். மறுக்க முடியுமா?மறுப்பது சட்டப்படியானதா?
சமூகநீதியில் பொருளாதாரத்தைத் திணித்தது – அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்லவா! அப்படியானால் சமூகநீதியில், கல்வி வேலை வாய்ப்பில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட (Socially an Educationally) என்றுதானே இருந்தது.
அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஒன்றிய ஆட்சி எப்படி 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக, எதிர்க்கட்சியினர் எதிர்த்தும், புறக்கணித்தும் அதற்கு மாறாக அவசர அவசரமாக ஒரே வாரத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் உட்பட பெற முடிகிறது!
‘உயர்ஜாதி ஏழைகள்’ என்ற பேரால் 10 சதவிகிதத்தை பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் படித்து பதவியில் உள்ள கூட்டத்தாருக்கே (EWS) ‘‘தாரை வார்த்த’’ கொடுமை எப்படி நடந்தது?
அது நியாயமா? கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிரதமர் நேரில் வாழ்த்துவதும், ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கிறித்துவர்களைத் தாக்குவதும் இரட்டை வேடமல்லவா?
இதே போன்றே டில்லியில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிரதமர் நேரில் போய் வாழ்த்து கூறுகிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அடித்தளத்தில்அமைந்த பஜ்ரங்தளம், விசுவ இந்து பரிஷத்காரர்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறித்துவசிறுபான்மையினர் மீது தாக்குதல்நடத்தி தங்களது ஹிந்துத்துவ மதவெறித்தனத்தை காட்டி மகிழ்ந்துள்ளனரே!
இதுபச்சையான இரட்டை வேடம் அல்லவா!
இதைத்தான் நமது ‘திராவிடமாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நாயகர் – முதலமைச்சர் சுட்டிக்காட்டி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அச்சிறுப்பான்மை மதத்தினரை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையையும் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி!
இதுதான் திராவிடம் – ‘திராவிட மாடல்’ ஆட்சி!
இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு காவித்தனத்திற்கு இடம் (2026 சட்டமன்றத் தேர்தலில்) தந்தால் மிஞ்சுவது காலித்தனம்தான்! எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை!!
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!