Tamilnadu

இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்ஜோரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் டிம்பா சதோம்பா என்ற நபர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். பழங்குடியினத்தை சேர்ந்த இவரது 4 மாத மாதக் குழந்தைக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினை இருந்துள்ளது. இந்த சூழலில் தனது 4 மாதக் குழந்தையை சைபாஸா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

கடந்த டிச.18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிச.19) குழந்தை இறந்துள்ளது. இதனால் துக்கத்தில் சூழ்ந்த குடும்பம், தனது குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் வசதியை நாடியுள்ளது.

மருத்துவமனை நிர்வாகமும், ஆம்புலன்ஸ் தற்போது வெளியே சென்றுள்ளது என்றும், ஒரு 2 மணி நேரம் காத்திருக்குமாறும் கூறியுள்ளது. இதனால் வெகு நேரம் காத்திருந்த இறந்த குழந்தையின் குடும்பம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படாததால், அங்கிருந்து கிளம்ப முற்பட்டனர். டிம்பா சதோம்பாவின் கையில் வெகு குறைவான பணமே இருந்ததால் அதனை வைத்தே அவரது குடும்பம் ஊருக்கு செல்ல வேண்டிய சூழலில் இருந்துள்ளது.

எனவே அருகில் இருந்த கடையில் ரூ.20-க்கு பை ஒன்றை வாங்கி, அதில் இறந்த 4 மாதக் குழந்தையின் உடலை வைத்து எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி குழந்தையின் உடலை பைக்குள் வைத்து, அரசுப் பேருந்தில் சுமார் 70 கி.மீ. வரை குடும்பத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த அவல நிலை குறித்து தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல மாற்று ஏற்பாடு எதையும் செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதே வேளையில், "இறந்த உடலை எடுத்துச் செல்வதற்காக மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸை வழங்காது. மாறாக இறந்த உடலை கொண்டு செல்வதற்காக தனியாக வாகனம் ஒன்று இருக்கிறது. இறந்த குழந்தையின் குடும்பத்தினர் அந்த வாகனத்தை கேட்ட அந்த சமயத்தில், அது சற்று தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

எனவே அந்த வாகனம் வந்ததும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோம். ஆனால் அதற்குள் டிம்பா அவசரப்பட்டு குழந்தையை பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்." என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதோடு, குழந்தை இங்கே அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குழந்தையின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் இந்த விவகாரம் தற்போது ஜார்க்கண்டில் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இர்பான் அன்சாரி தெரிவித்துள்ளார்.