Tamilnadu
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை ஒன்றிய பா.ஜ.க அரசு சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் ஒன்றிய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூபாய் 2152 கோடி எப்போது ஒதுக்கப்படும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எதிர்கட்சிகள் ஆளுகிற தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த நிதி ஒதுக்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பி.எம்;.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றை திறக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மும்மொழி திட்டத்தின்படி இந்தி திணிக்கப்படுவதால் அதை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருக்கிறது. 1968 முதல் தமிழ், ஆங்கிலம் மட்டுமே தமிழ்நாட்டில் போதிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தி திணிப்பு தவிர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, புதிய கல்விக் கொள்கையின்படி 5ூ3ூ3ூ4 கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால் இங்கே அமலில் உள்ள கல்வி நடைமுறை கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி 3 வயதான குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமென கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் 5 அல்லது 6 வயதில் தான் பள்ளியில் சேர்க்கப்படுகிற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் 51.4 சதவிகிதமாக இருந்து சாதனை படைத்து வருகிறது. ஆனால், தேசிய சராசரி 27.1 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள 38 மாநிலங்களில் 18 மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைவாக இருக்கும் போது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சமக்ரா சிக்ஷா அபியான் கல்வித் திட்டத்திற்கு நிதி மறுக்கப்படுவதால் 43.9 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு பட்ஜெட் மூலம் ஈடுகட்டி வருகிறது. இப்பிரச்சினை இரு அரசியல் கட்சிகளுக்கிடையேயான பிரச்சினை அல்ல. இது மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகும். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசு அணுகுவது பா.ஜ.க.வின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது.
தமிழ்நாட்டின் கல்வித்துறையை வஞ்சிப்பது போலவே, காவிரி டெல்டா விவசாயிகளிடமிருந்து அரசு நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்ததும் ஒன்றிய அரசின் வல்லுநர் குழு டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தது. ஆனால், இதுவரை இதுகுறித்த எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி மறுப்பு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 20 லட்சம் மக்கள் தொகை இல்லையென்று பொருந்தாத காரணத்தை கூறி ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. இத்தகைய தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!