Tamilnadu

துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை உடனே வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.கே.பி நகர் முல்லை நகர் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியினை ஆய்வு செய்தார்.

அப்போது, மழையால் பொதுமக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்து, விவரங்களை அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதற்கு முன்னதாக, மழைத்தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மழை நேரத்தில் மக்கள் பாதிப்பைச் சந்திக்காத வண்ணம் துரிதமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Also Read: சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?