Tamilnadu
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2025) சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு துறவியர் பேரவை சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான 'பசுமையான பூமி என்னாலே தொடங்கும்' என்ற மிதிவண்டிப் பயணத்தின் நிறைவு விழாவில் மிதிவண்டிப் பயணத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
பசுமை பயணம் விழிப்புணர்வு பேரணியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
பசுமையான வழி எந்நாள் தொடங்கும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெற்ற மிதிவண்டி பயணத்தினுடைய நிறைவு விழாவில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
நாம் அனைவரும் ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றோம். அதில் எந்தவிதமான சிரமமும் நமக்கு இல்லை. இயற்கையாகவே நமக்கு அது கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆக்ஸிஜன் நாம் சுற்றி இருக்கக்கூடிய இயற்கை வளங்கள், மரங்கள் மூலமாக நமக்கு கிடைக்கின்றது. ஆனால், எதிர்காலத்தில் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் நம்முடைய நிலைமை என்னவாகும் என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும்.
ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு கொரானா காலத்தில் நாம் ஒவ்வொருத்தரும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக எவ்வளவு பாடுபட்டோம், எவ்வளவு பற்றாக்குறை இருந்தது என்பதை கண்கூடாகப் பார்த்தோம். அதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். இதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்ப்பதுடன் பாதுகாக்கவும் வேண்டும்.
இப்போது இந்தியாவுடைய தலைநகர் டெல்லியில் பார்த்தீர்கள் என்றால் பயங்கர மாசுபாட்டினால் (Pollution) சுவாசப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் பாதுகாப்பான ஒரு இடத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விசயத்தில், இன்றைக்கு பெரியவர்களைவிட இங்கு வந்திருக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் மிகவும் அக்கறையாக இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விசயம். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை இளைஞர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
இங்கே வந்திருக்கக்கூடிய வரவேற்ற குழந்தைகள் அவர்களுக்கும் என்னுடைய ஸ்பெசல் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய தலைமுறையைவிட நமக்கு அடுத்து வருகின்ற தலைமுறை இன்னும் விழிப்புணர்வுடன் ஆகவும், இந்த இயற்கையை பாதுகாக்கின்ற விசயத்தில் இன்னும் கூடுதல் கவனமாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
நிறைய பெரியவர்கள் பொறுப்பில்லாமல் குப்பையை ரோட்டில் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். நிறைய பேர் வாய்க்காலில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் குழந்தைகள் என்றைக்குமே அந்த தவறை செய்யவேமாட்டார்கள்.
நிறைய பள்ளிகளில் ECO CLUB என்று தொடங்கியுள்ளார்கள். அதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்திலேயே நிறைய விவரங்களை ஆசிரியர் பெருமக்கள் கற்றுக் கொடுக்கின்றார்கள். படிப்புகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இன்றைக்கு சுற்றுச்சூழல் பிரச்சனை உலகத்திலேயே மிகப் பெரிய ஒரு பிரச்சனையாக, மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலாக இருக்கின்றது. புவி வெப்பமடைதலால் (Global warming) இன்றைக்கு பூமியுடைய வெப்பம் ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்துகின்ற நிறைய பொருட்களிலிருந்து, பெரிய, பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற கார்பனினால்தான் இன்றைக்கு பூமியுடைய வெப்பம் அதிகமாக கொண்டே இருக்கின்றது.
அதனால்தான் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டுகளில் பார்த்தீர்கள் என்றால், நிறைய இயற்கை பேரழிவுகள், இயற்கை சீற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. திடீர் என்று பார்த்தீர்கள் என்றால், மிகப் பெரிய வெள்ளம் வந்து விடுகிறது. மிகப் பெரிய மழை வருகிறது. சில சமயம் பார்த்தீர்கள் என்றால் வறட்சி ஏற்படுகின்றது. இப்படி கால நிலை மாற்ற பிரச்சனையினால் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகி கொண்டே வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை, இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாடுகளில் பல நகரங்களில் அதிகமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை காரணமே கார்பன் உமிழ்வு (carbon emission) என்பதுதான். அதனால், நாம் இப்போது நிறைய மின்சார வாகனங்களை (Electric Vehicles) உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றோம். இது சுற்றுச் சூழலுக்கு மற்றதைவிட மிகப்பெரிய பாதுகாப்பானது.
இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும் நிறைய மின்சார பேருந்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் தயாரிப்பதில்கூட பசுமை ஆற்றலுக்குதான் (Green Energy) நம்முடைய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. நாம் இதையெல்லாம் செய்கிறோம் என்றால், நமக்குப் பிறகு இருக்கக்கூடிய வருங்கால சந்ததியினர் சிறப்பாக வாழவேண்டும், வளமாக வாழவேண்டும் என்ற அந்த ஒரே அடிப்படையில்தான்.
சூரிய ஆற்றல் (Solar Energy), காற்று ஆற்றல் (Wind Energy) என்று தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை எடுக்கின்ற மாநிலம் என்றால் அது நம்முடைய தமிழ்நாடு தான் என்று பெருமையாக நான் உங்கள் முன்பு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
சுற்றுச் சூழல் பாதிப்பால் நம்மைச் சுற்றி நடக்கின்ற மாற்றங்களை நாம் அத்தனைபேரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான ஒரு சுற்றுச் சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க முடியும். நாம் செய்வது நமக்கு பெருமை கிடையாது, அது நம்முடைய கடமை.
இன்றைக்கு சென்னையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் முயற்சியால் நிறைய புதிய, புதிய பூங்காக்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இங்கே அருகில் செம்மொழி பூங்காவை சில வாரங்களுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். அதே மாதிரி தொல்காப்பிய பூங்கா, கிண்டி பூங்கா என்று ஒவ்வொரு பகுதிக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பூங்காக்களை புதிது, புதிதாக உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
நமக்கு பசுமையான சூழல் வேண்டுமா, இல்லை வறட்சியான சூழல் வேண்டுமா என்பது நாம் ஒவ்வொருத்தருடைய செயல்பாட்டில்தான் இருக்கின்றது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த அரங்கத்திற்கு வரக்கூடிய அந்த சாலையின் பெயரே பசுமை வழிச்சாலைதான்.
அதனால், இந்த சாலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பசுமை வழியில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவோம் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, உங்களுடைய அனைத்து முன்னெடுப்புகளுக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் அவர்கள் துணையாக இருப்பார் என்று சொல்லி, இந்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட அத்தனை இளைஞர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும், மாணவிகளுக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகின்றேன்.
Also Read
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!
-
”மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” : மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!