Tamilnadu
“பணிநியமனம் மற்றும் பதவி உயர்வால் 4.5 ஆண்டுகளில் 1 இலட்சம் பேர் பயன்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை3) ஆகியோர்களுக்கு பணிநியமன ஆணைகள் என மொத்தம் 220 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணிநியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பதவி உயர்வு மற்றும் பணிநியமன ஆணை
மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்றிருக்கிறது. இத்துறையில் 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 8,713 துணை சுகாதார நிலையங்களையும் 2,368 நகராட்சி, மாநகராட்சி சுகாதார நிலையங்களையும், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், 476 நடமாடும் மருத்துவ வாகனங்களையும், 395 பல் மருத்துவ சிகிச்சை முறைகளையும் பெற்றிருக்கின்ற ஒரு மிகப் பெரிய மகத்தான கட்டமைப்பு ஆகும்.
பொது சுகாதாரத்துறையில் மட்டுமே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு புதிய பணிநியமன ஆணைகள் தருவது, பதவி உயர்வுகள் மற்றும் பணியிடமாறுதல், புதிய பணியிடங்களை உருவாக்குவது என்று அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு பணியாளர்களின் நலம் காக்கும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது.
மேலும் புதிய பணிநியமனங்கள் தரும்போதே அவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது, புதிய பணியிடங்களை உருவாக்குவது, அதுமட்டுமல்ல அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே தகுதிகளை கருத்தில் கொண்டு பதவி உயர்வுகள் தருவது என்கின்ற வகையில் இந்த துறையில் கடந்த 4.5 ஆண்டுகளாக ஏறத்தாழ இலட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
அந்தவகையில் இன்றைக்கு 160 பகுதி சுகாதார செவிலியர்களுக்கு சமுதாய சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவத்துறையில் இருக்கின்ற 160 பகுதி சுகாதார செவிலியர்கள் பதவி உயர்வு பெறுவது இந்த துறையில் இதுதான் முதல் முறை. எனவே அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பகுதி சுகாதார செவிலியர்கள் அனைவரும் சமுதாய சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
பதவி உயர்வு என்பது வெறும் பணப்பலன் மட்டுமல்ல, சமூகத்தில் அவர்களுக்கான அந்தஸ்தை காட்டுவது. அவர்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களை தரம் பிரித்து காட்டுவது. அவர்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் தருவது. அந்தவகையில் இன்று 160 பகுதி சுகாதார செவிலியர்களுக்கு சமுதாய சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைச்சுப் பணி உதவியாளர்கள் 10 பேர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் 38 ஆய்வக நுட்புநர் நிலை-3, இதுநாள் வரை தொகுப்பூதியத்தில் இருந்தார்கள், அவர்களுக்கான நிரந்தர பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக தொடர்ந்து பணிநியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறையில் காலிப்பணியிடங்களே இருக்க கூடாது என்கின்ற வகையில் நிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஒட்டுமொத்தமாக காலிப்பணியிடங்களை நிரப்பிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் இன்று 12 ஆய்வக நுட்புநர்கள் நிலை-3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதியான 12 நபர்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 220 பேர் பயன் பெறுகிறார்கள்.
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு புதிய பணி ஆணைகள் 4,519 உதவி மருத்துவர்கள், 48 பல் மருத்துவர்கள், 1091 மருந்தாளுநர்கள், 131 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று 9,288 பேர் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் பணி ஆணைகளை கடந்த 4.5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறார்கள். இதுவரை எந்த அரசிலும் இவ்வளவு பணிஆணைகள் வழங்கப்பட்டதில்லை.
அதோடுமட்டுமல்லாமல் கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள் 281 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 3,009 ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 3,253 தற்காலிக ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
இதோடுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், நேரடி உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், மருந்து ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், புள்ளியியல் உதவியாளர்கள் என்று TNPSC சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2,261 பேருக்கு கடந்த 4.5 ஆண்டுகளில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதோடுமட்டுமல்லாமல் தேசிய நலவாழ்வு குழுமம் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட சுகாதார அலுவலர் போன்றோர்களின் தலைமையின்கீழ் இதுவரை 14,272 பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆக இதுவரை வெளிப்படைத்தன்மையுடன் புதிய பணியிடங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 35,702 பேர்.
மேலும் பணியிடமாறுதலுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தி பணியிடமாறுதல் பெற்றவர்களின் எண்ணிக்கை 43,155 பேர். அந்தவகையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 15,566 பேர்.
மேலும் கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை போன்ற புதிய மருத்துவமனைகள், 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 புதிய நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) மூலம் பெறப்பட்ட நிதி மூலம் கட்டப்பட்ட புதிய கட்டிடப் பிரிவுகளுக்கு தேவையான பணியிடங்கள், உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு தேவையான பணியிடங்கள் என்று வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 17,780 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் பயன் பெற்றிருக்கிறார்கள். அந்தவகையில் இன்று 220 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளும், பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு தொடர்பான கேள்விக்கு
இரண்டு மாதங்களுக்கு முன்பாக இதுதொடர்பாக விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் விரிவான அறிக்கை பத்திரிக்கையாளர்களுக்கு தரப்பட்டுள்ளது.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா என்னும் கொடிய நோய் பாதிப்பால் இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டிருப்பது கேரளாவில் இருக்கின்ற குளம், குட்டை போன்ற நீண்ட நாட்கள் தேங்கி இருக்கின்ற மாசு படிந்த நீரில் குளிப்பது என்பது.
இந்த குளங்கள் தூர்வாரப்படாமல் சேறு நிறைந்த அழுக்கு படிந்த அந்த நீரில் குளிப்பதனால் அவர்களின் மூக்கு வழியாக வைரஸ் மூளையில் நுழைந்து காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாசுபடிந்துள்ள குளங்களில் குளிக்க தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கேரளா மாநில அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கி வருகிறது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான கேள்விக்கு
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைவரும் நன்றாக அறிவர். நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்று அமைத்து, அந்த குழுவின் பரிந்துரைகளை பெற்று, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆளுநர் இந்த மசோதாவினை கிடப்பிலே போட்டு திருப்பி அனுப்பி விட்டார்கள்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய பிரதமர் அவர்களை நேரிடையாக சந்தித்து நீட் தேர்வு விலக்கு தர வேண்டும் என்று 2 முறை வலியுறுத்தியிருக்கிறார். நானும் கூட 10 முறை மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள்.
சட்டமன்றத்தில் ஆளுநர் தவிர்க்கவே முடியாத காரணத்தினால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்கள். குடியரசுத் தலைவர் அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார்கள். உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆயுஷ் இந்திய மருத்துவம் போன்ற துறைகளுக்கு 8 முறை தெளிவுரை கேட்டு அனுப்பினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் சட்டத்துறை வல்லுநர்களுடன் கலந்து பேசி அதற்குரிய பதில்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார்கள். கேட்ட தெளிவுரைகளையே திரும்ப திரும்ப கேட்டார்கள். அதையும் சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசி திரும்ப அனுப்பினோம். இந்நிலையில் குடியரசுத் தலைவர் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னாள் அதனை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இங்கு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டினார்கள். குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டது பிப்ரவரி 27 ஆம் தேதி. முதலமைச்சர் அவர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழ்நாட்டில் கூட்டி குடியரசுத் தலைவர் அவர்களின் இந்த செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இப்போதுமட்டுமல்ல ஏற்கெனவே ஒரு வழக்கும் போடப்பட்டது.
அது ஒன்றிய அரசு நீட் மசோதாவிற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில்தான் குடியரசுத் தலைவர் இந்த சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் காரணத்தினால் அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆக 2 வழக்குகள் முதலமைச்சர் அவர்களால் நீட் தேர்விற்கு எதிரான வழக்கும், குடியரசுத் தலைவர் சட்டமசோதாவை நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிராக ஒரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆக சட்டப் பூர்வ நடவடிக்கைகளையும் முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான அறிக்கையை கூட இந்தியாவில் இருக்கின்ற 9 மாநிலங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் அணுகி இந்தியாவில் இருக்கின்ற ஒட்டுமொத்த மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நாம் எடுக்கின்ற நடவடிக்கைகளை தெரிவித்திடும் வகையில் அவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
Also Read
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!
-
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!