Tamilnadu
புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நவம்பர்த் திங்கள் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டைப்பற்றி - தமிழ்நாட்டு மக்களைப்பற்றி - தமிழ்ச் சமுதாய மக்களிடையே நிலவும் அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை -- பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி எல்லாம் நன்கறிந்தவர்கள்!
அதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி நிறைவேற்றி வருகிறார்கள்.
குடும்பப் பணி ஒன்றே கடமையெனக் கொண்டு நாள்தோறும் உழைத்துவரும் மகளிர் மனவெழுச்சி கொள்ளும் வகையில் கட்டணமில்லாப் பயணத்திற்கு வழிவகுக்கும் "விடியல் பயணத் திட்டத்தை" அறிமுகப்படுத்தி; நாள்தோறும் 52 இலட்சத்திற்கு மேற்பட்ட மகளிர், மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் பயன்பெறச் செய்துள்ளார்கள்.
பிறர் கையை எதிர்பார்த்தே வாழ்ந்த இல்லத்தரசிகளின் சுயமரியாதையைக் காத்திட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி 1 கோடியே 15 இலட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி மற்ற மாநிலங்களும் பின்பற்றச் செய்துள்ளார்கள்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வாக்கிற்கு ஏற்ப ஒரு பள்ளி ஆய்வின்போது, சோர்ந்த முகத்துடன் இருந்த குழந்தைகளைக் கண்டு, வருந்தி வாடிய நெஞ்சத்தோடு அலுவலகம் வந்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, ஏறத்தாழ 20 இலட்சத்து 59 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், "காலை உணவுத் திட்டத்தைப்" பள்ளிகளில் நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பஞ்சாப், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் கனடா, இங்கிலாந்து நாடுகளிலும் இத்திட்டத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்த மகளிர் அனைவரும் உயர்கல்வியைத் தொடர்வதில்லை என்பதை அறிந்தவுடன், அனைவரும் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில் "புதுமைப்பெண் திட்டம்" தந்து மாதம் 1000 ரூபாய் வழங்கி எல்லோரும் உயர்கல்வி பெறச் செய்துள்ளார்கள்.
மாணவிகள் மட்டுமல்லாமல் மாணவர்களும் உயர் படிப்பைத் தொடர அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் தரும் "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை அறிமுகப்படுத்தி இரண்டு திட்டங்களிலும் 10 இலட்சத்திற்கு மேல் மாணவ, மாணவியர் பயன்பெறச் செய்துள்ளார்கள்.
கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் கவனத்திற்கு வரவே; அந்த வேறுபாட்டைக் களைந்து வேலைவாய்ப்புகள் கிடைத்திட வழிவகுக்கும் "நான் முதல்வன்" திட்டத்தை அறிமுகப்படுத்தி 41 இலட்சம் இளைஞர்களுக்குமேல் பயன்பெறச் செய்துள்ளார்கள்.
சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அறிந்து வேதனைப்பட்ட முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்படுவோரின் உயிர்களை உடனே காத்திட, "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆயிரக் கணக்கான உயிர்களைக் காத்துள்ளார்கள்.
செலவில்லாமல் முழுஉடல் பரிசோதனைகள் செய்து மக்களின் நலன்களைக் காத்திட "நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்".
நடுத்தர வயதுடையோரை அதிகம் பாதிக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதலிய தொற்றா நோய்கள் அவர்களைப் பற்றாமல் காத்திட "வீடுதேடி மருத்துவம் திட்டம்".
கொரோனா காலம் முதல் தடைபட்ட கல்வியைக் குழந்தைகள் தொடர்ந்திட "இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" எனப் புதிய புதிய திட்டங்களைச் செயல்படுத்திப் பயன் விளைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகச் செய்திட தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் புதிய புதிய சிப்காட் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, "முதலீட்டாளர்களின் முதல் முகவரி" எனத் தொழில் முதலீட்டு மாநாடுகள் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்துத் தொழில்கள் பல வளர்க்கிறார்கள்.
இப்படிப் புதிய புதிய திட்டங்களைச் செயல்படுத்தி நாளொரு திட்டம், பொழுதொரு சாதனை என வளர்த்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் தற்போது உருவாக்கியுள்ள புதிய திட்டம் "அன்புச்சோலை திட்டம்".
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, "அன்புச்சோலை - முதியோர் மனமகிழ் வள மையம்" என்ற திட்டத்தை திருச்சி மாநகரில் 10.11.2025 அன்று பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்கள்.
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. தற்போது தொடங்கப்படும் "அன்புச்சோலை - முதியோர் மனமகிழ் வள மையங்கள்" திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம் 20 அன்புச்சோலைகள், தொழில்துறை மாவட்டங்களான இராணிப்பேட்டையிலும் கிருஷ்ணகிரியிலும் 2 அன்புச்சோலைகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 3 அன்புச்சோலைகள் என மொத்தம் 25 ''அன்புச்சோலை'' மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்ப் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அன்புச்சோலைகள்
அன்புச்சோலை திட்டம், முதியோர்கள் மதிக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. குடும்பங்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களாகத் தொடர்வதற்கு அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் துணைபுரிகிறது.
முதலமைச்சர் அவர்கள் அன்புச்சோலை குறித்து கூறுவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை.
அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.
அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்கள். முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரித் திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின் சார்பில் இதுவரை ரூ.11,481 கோடி மதிப்பீட்டில் 38,35,669 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள்.
ரூ.2,800 கோடியில் 62,088 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றுடன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்கள்.
Also Read
-
எர்ணாகுளம் TO பெங்களூரு.. வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் RSS பாடலை பாடியதால் சர்ச்சை!
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, “அன்புச்சோலை திட்டம்!” : எப்போது தொடங்கப்படுகிறது?
-
இது இன்னொரு இடியாப்ப சிக்கல்! : “S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?