Tamilnadu

“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.10.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற "முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025" நிறைவு விழாவில் ஆற்றிய உரை.

இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்று, பல்வேறு வெற்றியிடங்களை பெற்று, பரிசுகளைப் பெறக்கூடிய அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! 

இத்தனை இளைஞர்களை திறமையாளர்களை அடையாளம் காண உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! 

The Young and Energetic அமைச்சரிடம் இளைஞர்களின் நலனையும், விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தையும் ஒப்படைத்தால், அது எப்படி வெற்றிகரமாக அமையும் என்பதற்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக ஆகியிருக்கிறது! 

நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உலக அரங்கில் வெற்றிகளைக் குவித்து, நாட்டிற்கு பதக்கங்களும், வெற்றிக் கோப்பைகளும் பெற்றுத் தரப்போகின்ற திறமையான இளம் விளையாட்டு வீரர்களை பாராட்டும் இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் விளையாட்டுத் துறையின் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்களையும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி அவர்களையும் மற்றும் அலுவலர்களையும் நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! 

தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் ‘Golden Age’-ஆக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது! National Level போட்டிகளாக இருந்தாலும், International Tournament-களாக இருந்தாலும், High Quality-ல் Host செய்யும் இடமாக, நம்முடைய தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது! 

நம்முடைய தமிழ்நாட்டு Players ஒவ்வொருவரும், நாங்கள் சாம்பியன்ஸ் என்று வெற்றி மேல் வெற்றிகளை குவித்துக்கொண்டு இருக்கிறார்கள்! இதற்குக் காரணமான நம்முடைய பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க, 37 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் இந்த “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்! 

தம்பி உதயநிதி அவர்கள் எடுத்துச் சொன்னது போல, கடந்த நான்கு ஆண்டுகளில், நம்முடைய தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் எப்படிப்பட்ட உயரங்களை அடைந்து இருக்கிறது என்று இளைஞர்களான உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்! அதனால்தான், நாட்டிலேயே பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத டபுள் டிஜிட் வளர்ச்சியை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்! 

இந்த சாதனைப் பயணம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது! தொடர்ந்து எதிரொலிக்கும்! திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்! அதனால்தான், பள்ளி, கல்லூரி மாணவர்கள் - மாற்றுத் திறனாளிகள் - பொதுமக்கள் - அரசு ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்வது போன்று, CM Trophy-யை Design செய்தோம்! 

இந்த CM Trophy-ன் கடந்த ஆண்டு வெற்றியைப் பார்த்து 16 இலட்சத்து 28 ஆயிரத்து 338 பேர் இந்த ஆண்டு பங்கேற்க ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்திருந்தார்கள்!  ஐந்து பிரிவுகளின்கீழ் நடந்த 38 போட்டிகளில் மாவட்ட - மண்டல அளவை எல்லாம் கடந்து, 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஸ்டேட் லெவலில் கலந்துகொண்டார்கள்! இவர்களில், தனிநபர் பிரிவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த வெற்றியாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் - 75 ஆயிரம் ரூபாய் - 50 ஆயிரம் ரூபாயும் - டீம் ஸ்போர்ட்ஸில் அணியில் இருக்கும் எல்லோருக்கும் 75 ஆயிரம் ரூபாய் - 50 ஆயிரம் ரூபாய் - 25 ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்குகிறோம்! 

அதுமட்டுமல்ல, இத்துடன் கல்வி உதவித்தொகை - அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல நன்மைகளையும் வழங்குகிறோம்! இந்த ஆண்டு, முதல்முறையாக இ-ஸ்போர்ட்ஸும் நடத்தியிருக்கிறோம்! அனைத்துப் போட்டிகளும் கேம்ஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலமாக வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டிருக்கிறது! அனைத்து அப்டேட்களையும் - ஸ்கோரையும் – “Whatsapp ChatBot” மூலமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்திருந்தோம்! இப்படி நிறைய செய்திருக்கிறோம்! 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில், விளையாட்டுத் துறை உட்கட்டமைப்புக்காக, 170 கோடியே 33 இலட்சம் ரூபாய்தான் நிதி ஒதுக்கப்பட்டது! ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில், 601 கோடியே 38 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்! ஒட்டுமொத்தமாக, விளையாட்டுத் துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா?

ஆயிரத்து 945 கோடியே 7 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்! அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் அரசை, விளையாட்டுத் துறைக்கான ‘கோல்டன் ஏஜ்’-என்று சொன்னேன்! இந்த நிலையில், விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் வழங்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி, இதுவரைக்கும் 1369 வீரர் – வீராங்கனைகளுக்கு, 25 கோடி ரூபாய்க்கு உதவிகளை வழங்கியிருக்கிறோம்! 

இந்த வீரர்கள் தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 350-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்று, தமிழ்நாட்டிற்குப் புகழ் தேடித் தந்திருக்கிறார்கள்! 

அதேபோல், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள 5 ஆயிரத்து 393 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 172 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது! விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற சிலவற்றை மட்டும் Highlight-ஆக சொல்கிறேன்… 

  • ‘எலைட்’ விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை 25 இலட்சத்தில் இருந்து, 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்! 

  • 17 விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கோடியே 19 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது! 

  • “பாராலிம்பிக்-2024” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நான்கு விளையாட்டு வீரர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

  • இதுமட்டுமல்ல. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவித்து, தலா மூன்று கோடி ரூபாய் செலவில், இதுவரைக்கும் 75 தொகுதிகளில், விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது! 

  • தலைவர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளுக்கும் - 16 ஆயிரத்து 798 விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கியிருக்கிறோம்! 

  • அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்குகிறோம். 

  • சென்னை - திருச்சி - மதுரை - நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடெமிகள் அமைக்கப்பட்டிருக்கிறது! 

நான் சொல்வதெல்லாம் கொஞ்சம்தான்! விளையாட்டுத் துறைக்கான சாதனைகளை பட்டியலிட்டு சொன்னால் இன்றைக்கு முழுவதும் சொல்ல வேண்டியதாக இருக்கும்! 

  நம்முடைய தமிழ்நாடு போன்று, வேறு எந்த மாநிலமும் விளையாட்டுகளுக்கும் - விளையாட்டு வீரர்களுக்கும் உதவிகள் செய்திருக்க மாட்டார்கள் என்று பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். இந்த உழைப்பால், நம்முடைய தமிழ்நாடு பெற்றிருக்கக்கூடிய சில அவார்ட்ஸ் மட்டும் சொல்கிறேன்… 

  • CII அமைப்பு சார்பில், SDAT-க்கு “விளையாட்டு வணிக விருது-2023” வழங்கப்பட்டது! 

  • இரண்டு ஆண்டுகளுக்கு ‘தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள்’ வழங்கப்பட்டிருக்கிறது!

  • ‘ஜெம் அவார்ட்ஸ் 2025’ வழங்கப்பட்டிருக்கிறது! 

  • நம்முடைய செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது கிடைத்திருக்கிறது! 

  • 2024-ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது! 

நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் வரவேற்புரையில் சொன்னாரே அந்த விருதுகள்!

இப்படி எத்தனை விருதுகள் தமிழ்நாட்டைத் தேடி வந்தாலும், நாங்கள் பெரிதாக நினைக்கின்ற விருது எது தெரியுமா? “தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸை கரியராக எடுத்தால், நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும் என்று நம்முடைய அரசின் திட்டங்கள் மீதும் முன்னெடுப்புகள் மீதும் நம்பிக்கை வைத்து இத்தனை ஆயிரம் பேர், இந்தப் போட்டிகளில் பங்கெடுக்குறீர்களே – உங்களின் இந்த நம்பிக்கைதான் எங்களுக்கான பெரிய விருதாக அமைந்திருக்கிறது! 

அண்மையில், இதே நேரு உள்விளையாட்டரங்கத்தில் கல்வியால் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தரும் மாணவர்களை பாராட்ட  “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியை நடத்தினோம்! அப்போது, கல்வியால் சிறந்த மாணவர்கள் மட்டுமல்ல, விளையாட்டால் உயர்ந்த இளைஞர்களும் தங்களின் அனுபவங்களை, சாதனைப் பயணத்தை பகிர்ந்து கொண்டார்கள்! 

காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸில், மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற 2022-இல் அர்ஜூனா விருது பெற்ற ஜெர்லின் அனிகா அவர்களின் தந்தை, தமிழ்நாடு அரசு அவர்களின் வெற்றிப் பயணத்திற்கு எந்தளவிற்கு துணை நின்றது என்று உருக்கமாக பேசினார்கள்! 

அதேபோன்று, ‘போல் வால்ட்’ விளையாட்டில் தேசிய அளவில் தொடர்ந்து சாதனை படைத்த, ரோசி மீனா பால்ராஜ் என்ற வீராங்கனை ஒரு ‘போல்’ வாங்க ஒன்றரை இலட்சம் ரூபாய் தேவைப்படும் என்ற அந்த எளிய பின்னணிலிருந்து வந்த தன்னிடம் அவ்வளவு காசு இல்லையே, என்று சொன்ன நேரத்தில் நம்முடைய அரசுதான் அனைத்து சப்போர்ட்டும் செய்தது. இப்போது தன்னிடம் ஆறு ‘போல்’ இருப்பதோடு, இரயில்வே துறையில் தனக்கு தரப்பட்ட வேலையைவிட, மூன்று மடங்கு சம்பளத்துடன் தமிழ்நாடு அரசு வேலை வழங்கியிருக்கிறது என்று பெருமையோடு சொன்னார். 

அடுத்து, சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான கேரம் வீராங்கனை காசிமா அவர்கள் என்ன பேசினார் என்று உங்களுக்கே தெரியும்! அமெரிக்காவில் உலக கோப்பை போட்டியில், 3 தங்கப் பதக்கங்களை வென்ற அவருக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கியது நம்முடைய திராவிட மாடல் அரசு! 

இப்படி, நம்மைப் பொறுத்தவரை, ஜெர்லின், ரோசி மீனா, காசிமா போன்ற எளியவர்களின் வெற்றிதான், நம்முடைய அரசின் வெற்றி! அதற்காகதான், பல்வேறு திட்டங்களின் மூலமாக எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை தமிழ்நாடு விளையாட்டுத் துறை இன்றைக்கு நிறைவேற்றி வருகிறது. அவர்களும் உலகளவில் சாதித்து, அவர்கள் மீது நம்முடைய அரசு வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த சமயத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது! நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஏராளமான பணிகளை, முன்னெடுப்புகளை நாள்தோறும் செய்வதைப் பார்த்து, ஒரு விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், என்னுடைய துறையில் செய்யப்பட்டு வந்த சாதனைகளை பட்டியலிட்டு பேசி, “நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று சொன்னார்!

இன்றைக்கு அதே ஏக்கம் எனக்கும் வந்திருக்கிறது! நானே விளையாட்டுத் துறையையும் கவனித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது! காரணம் உதயநிதியின் பணிகள் அப்படி இருக்கிறது! உதயநிதியின் பணிகள் இன்னும் இன்னும் சிறக்க வேண்டும்; தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இன்னும் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று நான் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்! 

இங்கிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் - வீராங்கனைகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது “உங்களுக்கான அத்தனை வாய்ப்புகளையும் நாங்கள் நிச்சயம் உருவாக்கித் தருவோம்; நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி முறையாக பயிற்சி செய்து, உங்கள் திறமையால் நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேருங்கள்!

உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முதலமைச்சராக நானும் இருக்கிறேன்; உங்கள் துறையின் அமைச்சரான துணை முதலமைச்சர் உதயநிதியும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சாதனை பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, களம் நமதே! வெற்றி நமதே! 

Also Read: முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!