Tamilnadu

”உங்களை எதிர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது” : ஆளுநருக்கு பதிலடி தந்த துணை முதலமைச்சர் உதயநிதி!

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க,ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ” திருச்சி என்றால் திருப்பு முனை. தீரர்கள் கோட்டை என்றால் அது திருச்சி. 75 ஆண்டுகள் கடந்து இன்றைக்கும் இளமையுடனும், வலிமையுடனும் நம் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் நமது கலைஞர். தலைவராக பொறுப்பேற்ற பிறகு சந்தித்த தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்றவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணம் திட்டம் மூலம் 820 கோடி முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே அ.தி.மு.கவை விழுங்கிய பா.ஜ.க தற்போது புதிய கட்சி ஒன்றை ஆக்கிரமிக்க நினைக்கிறது. பா.ஜ.கவின் எத்தனை சதிகள் வந்தாலும் அதை நம் கருப்பு, சிவப்பு தொண்டர்கள் முறியடிப்பார்கள்.

இங்கு இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு யாரை எதிர்த்து போராடுகிறது என்று கேட்கிறார். தமிழ்நாடு சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருக்கும் உங்களை எதிர்த்துதான் 4 ஆண்டுகளாக தமிழ்நாடு போராடி வருகிறது.இனியும் போராடி தொடர்ந்து வென்று காட்டும்.

’பிறப்பால் அனைவரும் சமம்’ என நான் பேசியதற்காக என் தலைக்கு சிலர் விலை வைத்தார்கள். இன்றைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் அதே கருத்தை பேசியதற்காக சனாதனிகளால் தாக்கப்பட்டுள்ளார். மக்களுக்காக பேசுபவர்களுக்கு ஒன்றிய பாஜக அரசில் இது தான் நிலைமை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவையே காக்கும் பொறுப்பு திமுக தொண்டனுக்கு உள்ளது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

Also Read: “காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம்!” : முதலமைச்சர் அறிவிப்பு!